கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கு குழந்தைகளை கடத்துவேன் என மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!!
கோவையை அடுத்த மயிலேறிபாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 37). இவர்களுக்கு 10, 5 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடிப்பழக்கம் உள்ள குப்புசாமி அடிக்கடி ராஜேஸ்வரியுடன் சண்டை போடுவார். இதனால் கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு எற்பட்டது. இதன் காரணமாக குப்புசாமி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். குடும்பப் படகை ஓட்ட கூலி வேலைக்கு சென்று வருகிறார். ராஜேஸ்வரியின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சிவகுமார்.
தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். குடும்பத்தகராறு காரணமாக சிவகுமாரின் மனைவி பிரிந்து சென்று விட்டார். தனிமையில் வசித்து வந்து சிவகுமாருக்கு ராஜேஸ்வரியின் மீது ஒரு கண் இருந்து வந்தது.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ராஜேஸ்வரியை ‘என்னுடன் உல்லாசமாக இருக்க வா’ என்று வற்புறுத்தி வந்தார். ராஜேஸ்வரி அவரை கடுமையாக எச்சரித்தார்.
இதுபோல நடந்து கொண்டால் போலீசில் புகார் செய்வேன் என்றார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் ராஜேஸ்வரியிடம் ‘நீ என்னுடன் உறவுக்கு வராவிட்டால் உனது 2 பெண் குழந்தைகளையும் கடத்தி விடுவேன்’ என்று மிரட்டினார்.
நிலைமை எல்லை மீறிப்போவதை உணர்ந்த ராஜேஸ்வரி பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.