கருங்கல்லில் கண்டக்டருடன் நர்சிங் மாணவி போலீசில் தஞ்சம்!!
கருங்கல் அருகே மிடாலக்காட்டை சேர்ந்த மணி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகள் நிஷா (வயது 19). திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிஷா நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார்.
அவர் கல்லூரிக்கு தினசரி மினி பஸ் மூலம் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 19–ந்தேதி வழக்கம்போல கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற நிஷா, மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கல்லூரியில் விசாரித்தனர்.
அப்போது நிஷா கல்லூரிக்கு செல்லவில்லை என்பது தெரிய வந்தது. உறவினர் வீடுகளில் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்காததால் அவரது தாய் லட்சுமி இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்தார்.
இதுபற்றி கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நர்சிங் மாணவி நிஷாவை தேடி வந்தனர். இதற்கிடையில் நிஷா, தனது காதல் கணவர் கிருஷ்ணகுமார் (21) என்பவருடன் கருங்கல் போலீசில் தஞ்சமடைந்தார். கிருஷ்ணகுமாரின் சொந்த ஊர் மருதங்கோடு ஆகும். என்ஜினீயரிங் பட்டதாரியான அவர், சரியான வேலை கிடைக்காததால் கடந்த சில மாதங்களாக மினி பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது அதே பஸ்சில் நிஷாவும் கல்லூரிக்கு சென்றதால் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. வீட்டில் தங்கள் காதலை ஏற்க மாட்டார்கள் என்று பயந்துபோன காதல் ஜோடி கேரளாவிற்கு ஓடிச்சென்று அங்கு ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துள்ளனர்.
மேலும் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டுமென்று அவர்கள் போலீசாரிடம் கூறினார்கள். இதை தொடர்ந்து அவர்களது பெற்றோரை வரவழைத்து சமரசம் செய்து காதல் ஜோடியை போலீசார் அனுப்பி வைத்தனர்.