இடுக்கியில் அதிக அளவில் நடைபெறும் குழந்தை திருமணங்கள்: 385–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் மலை கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்களிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், குழந்தை திருமணங்களும் அதிக அளவில் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக மத்திய அரசின் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இங்கு கள ஆய்வுப்பணியில் ஈடுபட்டன. இதில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இங்கு 39 குழந்தை திருமணங்கள் நடந்திருப்பது தெரிய வந்தது.
இது தவிர குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட வழக்குகள் அதிகம் பதிவாகி இருப்பதும் சுமார் 385 வழக்குகள் மீது விசாரணை நடந்து வருவதும் தெரிய வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இங்குள்ள பெண் குழந்தை ஒன்றுக்கு தமிழகத்தைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்தது. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதுபோல கடந்த திங்கட்கிழமை மூணாறைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் தமிழக வாலிபருக்கும் நடக்க இருந்த திருமணமும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் மூலம் தடுக்கப்பட்டது.
இடுக்கி மாவட்டம் தமிழக எல்லையையொட்டி அமைந்திருப்பதால் தமிழகத்தில் இருந்தும் இங்கு சிறுமிகள் அழைத்து வரப்பட்டு திருமணம் நடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.
பெரும்பாலும் இத்தகைய திருமணங்கள் பெண் குழந்தைகளின் பெற்றோர் சம்மதத்துடன் நடப்பதால் இது போலீசாருக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை. அப்படியே தகவல் கிடைத்து போலீசார் அங்கு சென்றாலும் குழந்தைகளின் பெற்றோர் இதுபற்றி புகார் கொடுக்க முன் வருவதில்லை என இங்கு ஆய்வு நடத்திய களப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற சமூக அவலங்களை போக்க மாநில அரசு ஆதிவாசி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு கல்வி போதித்தால் இதுபோன்ற நிகழ்வுகள் குறையும் என்றும், இந்த ஆய்வை மேற்கொண்ட களப்பணியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.