ஈராக்கை சேர்ந்த 301 கிலோ குண்டு மனிதருக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக எடை குறைப்பு ஆபரேஷன்!!
ஈராக் நாட்டை சேர்ந்த அலி சதாம்(43) என்ற 301 கிலோ எடை கொண்ட குண்டு மனிதருக்கு டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் எடை குறைப்பு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தேறியது.
அதிகமாக உண்ணும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்ட அலி சதாம், பல ஆண்டுகளாக காலை சிற்றுண்டியுடன் 24 முட்டைகள், மதிய உணவில் 12 சப்பாத்தியுடன் இரண்டே இரண்டு முழு கோழிகள், இரவு உணவின்போது 15 கபூ (அரேபிய ரொட்டி) ஒரேயொரு முழு ஆடு மற்றும் 2 லிட்டர் பால் மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார்.
இதனால், கடந்த 4 ஆண்டுகளாக நாளொரு ஊதல் பொழுதொரு உப்பல் என 301 கிலோ எடையை எட்டிவிட்ட அலி சாதாமின் உடலில் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை உள்பட பலவிதமான நோய்கள் குடிகொள்ள தொடங்கின.
உடலின் எடையை குறைத்து, இந்த வியாதிகளுக்கு எல்லாம் ஒருசேர விடையளிக்கும் விதத்தில் அலியை அவரது உறவினர்கள் இந்தியாவுக்கு அழைத்துவந்து டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆபரேஷன் மூலம் இந்த உடல் பருமனை கட்டுப்படுத்தி, குறைத்துவிடவும் முடியும் என நம்பிய டாக்டர்கள், அவரை இரண்டு கட்டில்கள் ஒன்றாக இணைத்து போட்ட படுக்கையில் கிடத்தி கடந்த 23-ம் தேதி அவரது வயிற்றை அறுத்தபோது திக்குமுக்காடிப் போனார்கள்.
வயிற்றின் தோலுக்கு அடியில் சுமார் ஒரு அடி கனத்துக்கு கொழுப்பு படிந்திருந்தது. இதேபோல், அனைத்து உள்ளுறுப்புகளிலும் அடர்த்தியான கொழுப்பு மூடியிருந்தது. அவரது இதய துடிப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு போன்றவை கட்டுப்படுத்தவும் ஆபரேஷன் செய்த டாக்டர்கள் படாதபாடு பட வேண்டியிருந்தது. எனினும், ஒரு மணி நேரத்தில் இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தேறியது.
இதன் விளைவாக ஐந்து நாட்களில் அலியின் எடையில் சுமார் 20 கிலோ குறைந்துள்ளது. இதனையடுத்து, அவர் நாளை டெல்லியில் இருந்து தாய்நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார்.
இன்னும் ஓராண்டுக்குள் அலியின் உடல் எடையில் சுமார் 150 கிலோ வரை குறைய வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அலி சதாம் வாயையும், வயிற்றையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் அவர்களின் நம்பிக்கை வீண் போகாது என நாமும் நம்பலாம்.