தற்கொலைக்காக கார் டிரைவர் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை நண்பர் குடித்து இறந்தார்!!
புதுவையை அடுத்த தமிழக பகுதியான உப்புவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குமார் (வயது 27). கார் டிரைவர். இவருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கணவன்–மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமாரின் மனைவி அவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். குமார் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார்.
இதனால் விரக்தியடைந்த குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். கடைசியாக நண்பர்களுக்கு மது விருந்து அளித்துவிட்டு தானும் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொள்ள குமார் திட்டமிட்டார்.
இதற்காக அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பாலாஜி (38) மற்றும் கொம்மடிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சங்கர் (25) ஆகியோரை மது குடிக்க அழைத்தார். நேற்று மாலை 3 பேரும் அங்குள்ள முந்திரி தோப்பில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது சேகர் நண்பர்களுக்கு தெரியாமல் தயாராக வைத்திருந்த விஷத்தை டம்ளரில் ஊற்றி அதில் மதுவையும் கலந்தார்.
அந்த டம்ளரை அருகிலேயே வைத்துவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார். இதனை அறியாமல் பாலாஜி விஷம் கலந்த மதுவை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மதுவில் விஷம் கலந்த டம்ளர் காலியாக இருப்பதை கண்டு குமார் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் விசாரித்தபோது விஷம் கலந்த மதுவை பாலாஜி குடித்திருப்பது தெரியவந்தது. இதனை தெரிவித்தால் எங்கே தம்மை தாக்குவார்களோ என பயந்த குமார் நைசாக பாலாஜியை அவரது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார்.
வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே விஷம் கலந்த மதுவை குடித்த பாலாஜி பரிதாபமாக இறந்து போனார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாலாஜியின் உறவினர்கள் கிளியனூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவான குமாரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.