திருச்சி விமானநிலையத்தில் ஆமைகள் கடத்தல் விவகாரத்தில் ஊழியர்கள் விஷம் குடித்தது அம்பலம்!!
திருச்சி கருமண்டபம் முன்னாள் சுங்கத்துறை அதிகாரி ரெத்தினசாமி மகன் தனசேகர் (வயது 33) சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
இருவரும் திருச்சி விமான நிலையம் சரக்கு முனையம் பிரிவில் ஒப்பந்த மேற்பார்வையாளர்களாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் திருச்சி அருகே இனியானூரில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அவர்களை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தனசேகர் பரிதாபமாக இறந்தார். சதீஷ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நண்பர்கள் இருவரும் மதுவில் விஷத்தை கலந்து குடித்திருப்பது தெரிய வந்தது. சிகிச்சை பலனின்றி இறந்த தனசேகருக்கு சரோஜா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது நண்பரான சதீஷ்குமாருக்கும் திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் நண்பர்கள் இருவரும் தற்கொலை சம்பவத்தில் ஈடுபட்டது ஏன் என்பது மர்மமாக இருந்தது. வேலை பார்த்த இடத்தில் பிரச்சனையா? அல்லது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் பாங்காங் நாட்டிற்கு சூட்கேட்ஸ்களில் மறைத்து 492 ஆமைகள் கடத்தப்பட்டது. இது தொடர்பாக ஆமைகளை கடத்திய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
அன்று விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்காக ஸ்கேனரில் தனசேகரும், சதீஷ்குமாரும் பணியில் இருந்துள்ளனர். பயணிகளின் உடைமைகளை ஸ்கேனில் சோதனை செய்யும் போது சந்தேகப்படும் படி பொருட்கள் மறைத்து வைகப்பட்டிருந்தால் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
ஆனால் ஆமைகள் கடத்தப்பட்ட 5 சூட்கேட்ஸ்களை இருவரும் ஸ்கேன் செய்து சோதனை முடிந்தது என்ற ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சுங்க துறை வருவாய் வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வந்து திடீரென சூட்கேட்ஸ்களை சோதனை செய்த போது தான் ஆமைகள் கடத்தல் விவகாரம் வெளியே தெரிந்தது.
இது தொடர்பாக தனசேகரையும், சதீஷ்குமாரையும் அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது. ஆமைகள் கடத்தல் விவகாரத்தில் மட்டும் கடத்தல் ஆசாமிகளுக்கு உதவினார்களா? வேறு கடத்தலுக்கும் உதவினார்களா? என்று இருவரிடமும் அதிகாரிகள் விசாரித்ததாக கூறப்படுகிறது.
இருவரது சொத்து விவரங்களையும் அதிகாரிகள் திரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஊழியர்கள் தனசேகரும், சதீஷ்குமாரும் கட்டி வரும் புது வீட்டின் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளனர். இதில் பரிதாபமாக தனசேகர் இறந்து விட்டார்.
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் 8 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தற்போது ஆமைகள் கடத்தல் விவகாரத்தில் ஊழியர்கள் தொடர்பும் தெரியவந்ததால் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விமான நிலைய ஊழியர்கள் கூறியுள்ளனர்.