டெல்லியின் தெருக்களில் டன் கணக்கில் கழிவுகள்: தொடரும் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம்!!
நாட்டின் தலைநகரான டெல்லியின் தெருக்களில் டன் கணக்கிலான கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம் 12000 துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம். பிப்ரவரி மாதத்திலிருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்காத நகராட்சியின் அலட்சியப் போக்குக்கு எதிராகவே அவர்கள் போராடி வருகின்றனர்.
தங்களுக்குக் கிடைக்க வேண்டிய 3 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கும்படி, போராட்டத்தில் இறங்கியுள்ளனர். டெல்லி துப்புரவு தொழிலாளர்கள். இரண்டாவது நாளாக, நேற்றும் இவர்களது போராட்டம் நடைபெற்றது. தங்களின் போராட்டம் கவனம் பெறுவதற்காக, வேலை நிறுத்தம் மட்டுமின்றி பல இடங்களிலிருந்தும் குப்பைகளை எடுத்து வந்து தெருக்களில் கொட்டி போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தால் லெக்ஷ்மி நகரில் உள்ள ராதா பேலசில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போராட்டக்காரர்களில் ஒருவர் கூறுகையில் “நாங்கள் பசியோடிருக்கிறோம். எங்கள் குழந்தைகளின் பசியை ஆற்றுவதற்குக் கூட எங்களிடம் உணவில்லை. அதனால்தான் சாலையில் இறங்கி போராடுகின்றோம்” என்றார்.
“அரசாங்கம் எங்கள் பிரச்சனையை கவனித்து எங்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தைக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் அடுத்த நாளே வேலைக்கு செல்வோம்.” என்கிறார் மற்றொரு போராட்டக்காரர்.
இந்த பிரச்சனை குறித்து டெல்லி நகராட்சிப் பொறுப்பை கவனிக்கும் பா.ஜ.க விடம் டெல்லி துணை முதல்வர் சிசோடியா விளக்கம் கேட்டுள்ளார். உங்களால் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியாவிட்டால் பொறுப்பை ஆம் ஆத்மியிடம் ஒப்படைக்கும் படியும் பா.ஜ.க விடம் அவர் தெரிவித்துள்ளார்.