பேரணாம்பட்டு ஆசிரியை கொலை வழக்கில் கணவன் கைது!!
பேரணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பம் அருகே பாலாற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்த பெண் அதே பகுதியில் உள்ள நரியம்பட்டை சேர்ந்த இக்பால் அகமதுவின் மனைவி ஷேபாஅஞ்சும் (வயது 33) என்பது தெரியவந்தது.
இவருக்கும் இக்பால்அகமதுவுக்கும் 12 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் திருமணம் முடிந்த ஒரு சில ஆண்டிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். ஷேபாஅஞ்சும் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உருது ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 25 நாட்களுக்கு முன்பு பெரியோர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி கணவன்–மனைவியை சேர்ந்து வாழ வைத்தனர். இந்த நிலையில்தான் ஷேபாஅஞ்சும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை குறித்து பேரணாம்பட்டு போலீசார் டி.எஸ்.பி. விஜயகுமார், இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். ஷேபா அஞ்சும் கணவர் இக்பால் அகமது மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவி ஷேபா அஞ்சுமை இக்பால் அகமதுவே கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இக்பால் அகமது அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–
நானும், என் மனைவியும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்திருந்தோம். கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் சேர்ந்து வாழ தொடங்கினோம்.
இந்நிலையில் ஆசிரியையான எனது மனைவி ஷேபா அஞ்சுக்கும் வேறொரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஷேபா அஞ்சும் நடவடிக்கையிலும் மாற்றம் இருந்து வந்தது.
என்னுடன் உல்லாசமாக இருந்த போது உறவு பற்றி ஏளனமாக பேசி இழிவுபடுத்தினார்.
இதனால் அவளை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். அதற்காக கடந்த 27–ந் தேதி வேலூருக்கு அழைத்து சென்றேன். பூங்காவில் சுற்றினோம். பின்னர் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டு விட்டு அங்குள்ள கடையில் பருப்பு கடையும் மத்து, கத்தி உள்ளிட்ட பொருட்களை வாங்கினேன்.
பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் ஆம்பூர் சர்க்கரை ஆலை அருகே உள்ள கீழ்முருங்கை வரை சென்றோம். இதையடுத்து எல்.வி.குப்பம் பாலாற்று படுகைக்கு இரவு 7 மணியளவில் நடந்து சென்றோம்.
அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தோம். அப்போது அவளிடம் யாருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாய் எனக்கேட்டு கல்லால் சரமாரியாக தாக்கினேன். இதில் அவள் நிலை குலைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவள் இறந்ததை உறுதி செய்து கொண்டு, பிணத்தை நிர்வாண நிலையிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
கொலையாளி இக்பால் அகமதுவிடம் எஸ்.பி.செந்தில்குமாரி விசாரணை நடத்தினார். இதனையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு இக்பால் அகமது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.