ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் காரை விட்டு மோதி கொள்ளையடித்த கும்பல்!!
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வணிக வளாக கடையின் மீது காரால் மோதி கொள்ளையர்கள் மிக துணிச்சலுடன் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெராவில் கிப்பாக்ஸ் வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள ஒரு தங்க நகைக்கடையில் கொள்ளை அடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டது. இதற்காக கடையின் கதவை உடைக்க கடப்பாரை கம்பியையோ, இரும்பையோ ஆயுதமாக பயன்படுத்தவில்லை. மாறாக, அவர்கள் சுபாரு இம்ப்ரெசா என்ற காரை பயன்படுத்தியுள்ளனர்.
நேற்று அதிகாலையில் முகமூடி அணிந்த 3 முதல் 5 பேர் வரை சுபாரு இம்ப்ரெசா காரில் கிப்பாக்ஸ் வணிக வளாகத்திற்குள் சென்றனர். அங்கு மூடியிருந்த பிரதான கதவின் மீது வேகமாக காரை மோதி உடைத்தனர். பின்னர் அதிவேகமாக சென்ற அந்தக் கார் மேலும் ஒரு கதவின் மீது டமார் டமார் என மோதி உடைத்தது.
அதன்பின் நேராக ஒரு நகைக்கடை அருகே சென்ற கார், அந்த கடையின் கதவையும் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. உடனே காரில் இருந்த இரண்டு நபர்கள் அந்த கடையின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கடையில் கடந்த ஒரு வருடத்தில் இத்துடன் 3 முறை கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருட்டுக்கு பயன்படுத்திய காரை கொள்ளையர்கள் ஒரு கான்பெரா புறநகர்ப் பகுதியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். நடந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டு அதன் மூலம் துப்பு துலங்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அந்த கொள்ளையர்கள் பற்றி தகவல் தெரிந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.