சரித்திரம் பேசு (திரைவிமர்சனம்)!!

Read Time:6 Minute, 19 Second

SARITHIRAM-PESUமதுரையில் வேலைவெட்டிக்கு எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார்கள் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள். பொழுதுபோக்காக கபடியும் விளையாடி வருகிறார்கள். இவர்களை எதிர்த்து விளையாடும் அணியினரிடம் எப்போதும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார்கள்.

அதே ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் சரவணன், பெண்கள் விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். பெண்கள் மீது மிகுந்த மரியாதையும் வைத்திருக்கிறார். பெண்களிடம் யாராவது தவறாக நடக்க முயன்றால் அவர்களை கொலை செய்யக்கூட துணிந்தவராக இருக்கிறார்.

இந்நிலையில், ஒருநாள் இவருடைய அக்கா மகள், தனது காதலனுடன் தனிமையில் பேசிக் கொண்டிருப்பதை நேரில் பார்க்கிறார் சரவணன். அக்கா மகள் வீடு திரும்பியதும் அவன் யாரென்று விசாரிக்கிறார். அவள் தனது நண்பன் என்று பொய் கூறுகிறாள். ஆனால், சரவணனோ அவளை கண்டித்து வைக்கிறார்.

இதனால் விரக்தியடைந்த சரவணனின் அக்கா மகள் வீட்டை விட்டு வெளியேறி, காதலனுடன் ஓடிவிடுகிறாள். இதைக்கண்டு கோபமடைந்த சரவணன் அவர்களை தேடிப்பிடித்து கொலை செய்ய முடிவெடுக்கிறார்.

கொலைகாரக் கும்பல் காதலர்களை துரத்திச் செல்லும் வேளையில் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும் நாயகன் மற்றும் அவரது நண்பர்களிடம் சென்று உதவி கேட்கிறார்கள் காதலர்கள். காதலன், கபடி அணியில் எதிரணியில் விளையாடுபவன் என்பதால் அவனுக்கு உதவி செய்ய நண்பர்கள் தயங்குகிறார்கள். மேலும், அவன் கூட்டிக் கொண்டு வந்தது சரவணின் அக்கா மகள் என்பதால் மேலும் பயப்படுகிறார்கள்.

இருப்பினும், தன்னை நம்பி வந்தவர்களை கைவிடக்கூடாது என்பதால் விரட்டி வந்த கும்பலிடமிருந்து இவர்களை மறைத்து வைத்து காப்பாற்றுகிறார்கள். விரட்டி வந்த கும்பல் வேறு வழியில் சென்றுவிட்டதும், காதலர்களை பத்திரமாக இருக்கும்படி அனுப்பி வைக்கிறார்கள் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள்.

ஆனால், சரவணன் மற்றும் அவரது ஆட்கள் காதல் ஜோடிகளை கண்டுபிடித்து கொலை செய்து விடுகின்றனர். இதையடுத்து நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் சரவணன் வீட்டில் சென்று பிரச்சினை செய்கின்றனர். காதலர்களுக்கு உதவி செய்தது இவர்கள்தான் என்பதை அறிந்த சரவணன், நண்பர்களில் இருவரை கொலை செய்துவிடுகிறார். பழிக்கு பழிவாங்கும் விதமாக சரவணனின் தம்பிகளில் ஒருவனை நாயகன் மற்றும் அவரது மற்ற நண்பர்களும் சேர்ந்து கொன்று விடுகின்றனர். இதனால் பகை பெருகிக் கொண்டே போகிறது.

இறுதியில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பகைக்கு முற்றுப்புள்ளி கிடைத்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகர்களாக வரும் யோகேஸ்வரன் போஸ், கிருபாகரன் இருவரும் நட்புக்கு இலக்கணமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால், இருவருக்கும் நடிப்புதான் சரியாக வரவில்லை. சண்டைக் காட்சிகளிலும், ஆக்ரோஷமாக வசனம் பேசும் இடங்களிலும் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். நாயகியான கன்னிகாவுக்கு படத்தில் பெரிதாக காட்சிகள் இல்லாவிட்டாலும், பாடல் காட்சிகளில் வந்து மனதில் பதிகிறார்.

வில்லனாக வரும் டாக்டர் சரவணனுக்கும் நடிப்பு பயிற்சி தேவைப்படுகிறது. ஏற்கெனவே ஒரு படத்தில் நாயகனாக நடித்திருப்பதால், இந்த படத்தில் நடிப்பில் கொஞ்சம் மெருகேறியிருப்பார் என்று பார்த்தால் சுத்தமாக முன்னேற்றமில்லை. வில்லனுக்குண்டான ஆக்ரோஷமான வசனங்கள் இருந்தாலும், அதை இவர் பேசும்போது காமெடியாக இருக்கிறது. கஞ்சா கருப்பு காமெடிக்காக இருந்தாலும், இவரது காமெடி ஒன்றும் பெரிதாக எடுபடவில்லை.

இயக்குனர் ஸ்ரீபோஸ் கதாபாத்திரங்கள் தேர்விலேயே கோட்டை விட்டுவிட்டார். பிறகு கதையை எங்கே தேடுவது? படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரை எந்தவித காட்சியும் சுவராஸ்யம் இல்லாமல் எடுத்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. சரத்குமார் என்ற பெரிய ஹீரோவை வைத்து ‘சத்ரபதி’ என்ற படத்தை கொடுத்த இயக்குனர், இதில் புதுமுகங்களை வைத்து பலபரீட்சை நடத்தியிருக்கிறார். அதில் தோற்றுத்தான் போயிருக்கிறார் என்று சொல்லவேண்டும்.

ஜெயக்குமார் இசையில் ‘வருது வருது’ பாடல் மட்டும் பரவாயில்லை. மற்றபடி எந்த பாடலும் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்தான். ஜெகதீஷ் ஒளிப்பதிவு சுமார்.
மொத்தத்தில் ‘சரித்திரம் பேசு’ பேச ஒன்றும் இல்லை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலம் அருகே சிறுவன் மாயம்!!
Next post 42 லட்சம் பேர் பார்தத தீபிகா படுகோனேவின் MY CHOICE!!!