கீதை போட்டியில் முதல் பரிசு வென்ற மரியம் ஆசிப் சித்திக்கிக்கு உ.பி.அரசு சார்பில் பாராட்டு விழா!!
பகவத் கீதை போட்டியில் முதல் பரிசை வென்ற முஸ்லிம் மாணவிக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள ‘இஸ்கான்’ அமைப்பு, ‘கீதா சாம்பியன் லீக்’ (பகவத் கீதை போட்டி) போட்டி நடத்தியது. இதில், 195 பள்ளிகளை சேர்ந்த, 4,617 மாணவர்கள் கலந்து கொண்டனர். பகவத் கீதை போட்டியில் கலந்து கொள்ள, விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, நகரில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், இதில் கலந்துகொண்டனர்.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில், மாணவர்களின் புரிதல் திறன் மற்றும் அறிவுத் திறன் குறித்து சோதிக்கப்பட்டது. இப்போட்டியில், 12 வயதான, மரியம் ஆசிப் சித்திக்கி என்ற முஸ்லிம் மாணவி, முதல் பரிசை தட்டிச்சென்றார்.
இவர், மரியம் மீரா ரோடில் உள்ள, காஸ்மோபாலிட்டன் உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். முஸ்லிம் மதத்தில் பிறந்த மரியம், பைபிள் மற்றும் பகவத் கீதையை படித்துள்ளார்.
‘மனிதநேயம் மற்றும் அடுத்தவர்களுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய வேண்டும்’ என்று, எங்களுடைய புனித நூலான குரான் வலியுறுத்துகிறது. ஆனால், சமுதாயத்தில் பெரும்பாலோர், இதை தவறாக எடுத்துக் கொண்டுள்ளது, வருத்தத்தை அளிக்கிறது’ என்று இப்பரிசை பெற்ற பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த மரியம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மரியம் ஆசிப் சித்திக்கிக்கு உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்த அம்மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தீர்மானித்துள்ளார் என அரசு செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்தார். இந்த பாராட்டு விழாவின் மூலம் அனைத்து மதங்களின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்னும் நற்செய்தியை மக்களுக்கு உணர்த்த விரும்புகிறோம் எனவும் அவர் கூறினார்.