மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது!!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 26 ம் தேதி மாலை வேடபரி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக சுமார் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த செல்வராஜ் வயது 53 என்பவரும் பாதுகாப்புபணியில் இருந்தார். இந்நிலையில் நள்ளிரவு இரண்டு வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களை எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தார்.
அப்போது சிறிது தூரம் சென்ற ஒரு வாலிபர் மீண்டும் ஓடி வந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜின் முதுகு பகுதியில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றான். பின்னர் படுகாயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின் செல்வராஜ் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற வாலிபரை தேடி வந்தனர். இந்நிலையில் துவரங்குறிச்சி அருகே ஆடு திருடிய 4 பேரை கிராம மக்கள் பிடித்து துவரங்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.
4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதில் ஒருவர் தான் வீரப்பூரில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தியது என்பது தெரியவந்தது. மேலும் அவனிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவன் பெயர் ராஜ்குமார் வயது 24 என்பதும் மணப்பாறையை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.
வேடபரி அன்று வீரப்பூர் திருவிழாவிற்கு ஆடு அறுக்க சென்ற ராஜ்குமார் ஒருவருடன் சண்டையிட்டு கொண்டிருந்த போது சாதரண உடையில் வந்த சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இருவரையும் எச்சரித்து அனுப்பி உள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த ராஜ்குமாருக்கு எச்சரித்தவர் சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரியாமல் அவர் செல்லும் போது முகுது பகுதியில் ஆடு அறுக்க பயன்படுத்திய கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் ராஜ்குமாரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருட்டு சம்மந்தமான பல வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.