சென்னை ஐ.சி.எப்.பில் அரிசி கடை அதிபர் மனைவி கொலையில் ஊழியர் கைது!!
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கமலநாதன் இவர் ஐ.சி.எப். சிக்னல் அருகில் அரிசிக்கடை நடத்தி வருகிறார்.
கமலநாதனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் அரிசி கடையை அவரது மனைவி தேவியே கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல அரிசி கடைக்கு வந்த அவர் கடையில் அமர்ந்து பணிகளை கவனித்தார். மாலையில் கடையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் டீ குடிப்பதற்காக வெளியில் சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, கடைக்கு உள்ளே தேவி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது கைகள் முறிக்கப்பட்டிருந்தன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் ஐ.சி.எப். போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது தேவி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் உடலை அனுப்பி வைத்தனர். அரிசி கடைக்குள் வெளியாட்கள் வருவதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை என்பதால், கடை ஊழியர்கள் தான் தேவியை கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர்.
இதை தொடர்ந்து கடையில் வேலை செய்த ஊழியர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாலகுருநாதன் (38) என்ற ஊழியரே, தேவியை கொலை செய்திருப்பது அம்பலமானது.
வில்லிவாக்கம் தான்தோனி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த இவர், கமலநாதனின் அரிசி கடையில் நீண்ட நாட்களாக வேலை செய்து வருகிறார். உடல் நிலை சரியில்லாததால், சமீபகாலமாக கமலநாதன் சரியாக கடைக்கு வருவதில்லை. இதனால் கடையின் முழு பொறுப்பையும், அவரது மனைவி தேவியே கவனித்து வந்தார்.
கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் தேவி கொஞ்சம் கடுமையாகவே நடந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. பாலகுருநாதனையும் தேவி, அடிக்கடி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் யாரும் இல்லாத நேரத்தில் தேவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இதன்படி, நேற்று முன்தினம் மாலையில் கடையில் யாரும் இல்லாத நேரத்தில் பாலகுருநாதன் தேவியை கடுமையாக தாக்கியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட சண்டையில்தான் அவரது கை முறிந்துள்ளது. இதில் மயக்கம் போட்டு விழுந்த தேவியின் மீது பாலகுருநாதன் அரிசி மூட்டையை தூக்கி போட்டுள்ளார். இதில் அவர் பலியானார். பாலகுருநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன. இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.
இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.