By 10 April 2015 0 Comments

சிறிதரன் எம்பிக்கு வந்திருக்கும் ஆசை மயக்கம்..!! -வடபுலத்தான்!!

timthumb (3)தேர்தல் வரப்போகிறது என்று ரணில் விக்கிரமசிங்க அறிவித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா!

இந்த அறிவிப்பு பல எம்.பி மாரின் வயிற்றைக் கலக்கியிருக்கிறது. அடுத்த தடவை தங்களின் வெற்றி வாய்ப்புகள் எப்படியிருக்கும் என்று தெரியாத கலக்கம்.

இந்தக் கலக்கம் அவர்களை ஒரு இடத்தில் நிற்க முடியாமல் தவிக்க வைக்கிறது. பசியை மறைக்கிறது. தூக்கத்தைக் கெடுக்கிறது.

இதனால், தங்களுடைய வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் பாடாய்ப்படுகிறார்கள்.

இதில் முன்னணி வகிக்கிறார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சிறிதரன் எம்.பி.

இதற்காக அவர் எல்லா இடங்களுக்கும் ஓடி ஓடிப் போய் ஆட்களைச் சந்திக்கிறார். அவருக்குத் தெரிந்த ஆட்களின் முதுகில் தடவுகிறார். ஆதரவாளர்களின் வீடுகளில் தஞ்சமடைகிறார். தீர்க்க முடியாத பிரச்சினைகளை எல்லாம் தான் தீர்த்து வைப்பேன் என்று உறுதி சொல்கிறார். இதற்காக அவர் என்னவெல்லாமோ சொல்லுகிறார்.

பிறந்த நாள் கொண்டாட்டம், மரணச்சடங்குகள், திருமண நிகழ்வுகள், பிரிவுபசார வைபவங்கள், ஓய்வுபெறுவோரை மதிப்பளிக்கும் நிகழ்ச்சிகள், கோயில் பொங்கல், திருவிழா, குளிர்த்திகள் என ஒண்டையும் விட்டு வைக்காமல் அங்கெல்லாம் ஓடிப்போய், அழையா விருந்தாளியாக நுழைந்து கொள்கிறார்.

‘அரசியலில் நான் வெல்லலாம். தோற்கலாம். ஆனால் நான் மக்களுக்காகவே எப்போதும் செயற்படுவேன். மக்களுடைய உரிமைகளை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். உங்களுக்காகவே என்னுடைய இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது….’ என்றெல்லாம் ‘பஞ்ச்’ டயலொக் பேசிக் கொண்டிருக்கிறார்.

இது போதாதென்று, ‘கடந்த காலத்தில் நான் சில தவறுகளைச் செய்திருக்கிறேன். தனிப்பட்ட ரீதியில் பலரைத் தாக்கிப் பேசியிருக்கிறேன். பலருடன் நேரடியாக முரண்பட்டிருக்கிறேன். அவர்களுடன் பகைமை பாராட்டியிருக்கிறேன். ஆனால், இதெல்லாம் தவறு என்பதை இப்பொழுது – இந்த வயதில் புரிந்து கொள்கிறேன். ஆகவே இனிமேல் நான் அப்படிச் செய்ய மாட்டேன். அரசியலில் எதிரான – மாறான நிலைப்பாடுகள் இருக்கலாம். அதற்காக நாம் பேசாமல் இருப்பதோ பகைமை பாராட்டுவதோ கூடாது…’ என்று ‘இனிப்புக் கிறீம்’ வேறு பூசுகிறார்.

இவ்வளவுக்கும் இவருடைய இணையத்தளங்கள் (லங்கா சிறி குழுமத்தின் ‘தமிழ்வின்’, லங்கா சிறி’, ஜே.வி.பி.நியூஸ்’ உள்ளிட்டவை தாராளமாக மற்றவர்களின் மீது சேறு பூசிக் கொண்டிருக்கின்றன. அரசியல் பழிவாங்கல்களை அவை தாராளமாகவே செய்கின்றன.

அது மட்டுமல்ல மாற்று அரசியல் தரப்பைச் சேர்ந்த எந்த அரசியல்வாதியையும் இவர் எங்கும் மதித்தது கிடையாது. இப்பொழுதும் யாரையும் மதிப்பதில்லை. அதாவது அதில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.

இதையும்விட, பிற கட்சிகளை ஆதரிக்கின்ற – பிற அரசியல் நிலைப்பாட்டை ஏற்றிருக்கும் சாதாரண மக்களைக் கூட இவர் மதிப்பதில்லை. அவர்களைக் கண்டால் வில்லன் பார்வை பார்ப்பதும் கட்சி ஆதரவாளர்களிடம் மற்றக் கட்சியினரைப் பற்றியும் வேறு அபிப்பிராயமுள்ளவர்களைப் பற்றியும் வசை வசையாகப் பொழிகிறார்.

ஏன், தன்னுடைய கட்சிக்குள்ளேயே மற்றவர்களை இவர் மதிப்பதில்லை.

இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறவருக்கு இருக்கிற ஆசைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த ஆசைகள் பலவிதம். அதில் சில –

1.தமிழரசுக் கட்சியில் தானே சம்மந்தனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் ஆலோசனை சொல்கிறேன். தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைவர் தானே. மாவை ஸ்ரோங்காக கட்சியை வழிநடத்த மாட்டார். அவரைச் சுமந்திரன் மேவி விடுவார் என்று வேறு சொல்கிறார். இதைக் கேட்கும்போது உங்களுக்குச் சிரிப்பு வந்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

2.அடுத்தது தலைவராகச் சம்மந்தன் இருந்தாற்கூட அவரைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் வல்லமையும் தன்னிடமே உண்டென்று எல்லா இடத்திலயும் சொல்லி வருகிறார். தமிழ் ஊடகங்களில் தனக்கே கூடுதலான செல்வாக்கு இருக்கென்றும் இணையத்தளங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் தனக்கிருக்கும் ஆதரவைப்போல வேறு யாருக்கும் இல்லை என்றும் இதனால், தான் நினைத்தால் எதையும் செய்வேன். அப்படிச் செய்து காட்டுவேன். அப்போது எல்லாருக்கும் தெரியம் இந்தச் சி.சி (டபிள் எஸ்.எஸ்) யார் என்று சவால் வேறு விட்டிருக்கிறார்.

3.இது ஒரு புறம் இருக்க மற்றப்பக்கத்தில் அவர் தமிழரசுக் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களான சம்மந்தன், மாவை சேனாதிராஜா, விக்கினேஸ்வரன், சி.வி.கே. சிவஞானம் போன்றோரைத் தன்னுடைய கைக்குள் போட்டிருக்கிறார். இவர்களைக் காணும்போது இவர்களைக் குளிர்விக்கும் விதமாக இனிப்பாகக் கதைக்கிறார். இதைப் பற்றித் தன்னுடைய விசுவாசிகளுக்கு அவர் சொன்னார் – ‘இவர்களின் தோளில் ஏறித்தான் கட்சியின் தலைமைப்பீடத்தைப் பிடிக்க முடியும்’ என்று. ஒரு நாள் இரவு தன்னுடைய நெருங்கிய சகாக்களிடம் தன்னுடைய உள்ளக்கிடக்கையை எல்லாம் கொட்டித்தீர்த்திருக்கிறார். ஆகவே, தலைமைக்குக் குறிவைத்திருக்கிறது இந்தப் ‘போலிப்புலி’ என்கிறார்கள் விசயமறிந்தவர்கள்.

4.தற்போதுள்ள புதிய ஆட்சிச் சூழலில் மெல்ல மெல்ல கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னுடைய அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்க முயற்சிக்கிறார் சிங்கன். இதற்காக அவர் பிரதேச செயலர்களை மையமாக வைத்துக் கொண்டு காய்களை நகர்த்தப் பார்க்கிறார். இதன் முதற்கட்டமாகவே காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறார்.

இது ஏற்கனவே சந்திரகுமார் எம்பி கையில் எடுத்துத் தீர்வு காண முற்பட்ட விசயம். இப்பொழுது சிறிதரன் இதைக் கையில் எடுத்து திரும்பத்தான் ஏதோ செய்வதாகக் காட்டுவதற்காக ‘அரைத்த மாவை அரைக்கிறார்’.

இந்த விசயம் என்னவென்றால், கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள பரந்தன், புன்னைநீராவி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள மத்திய வகுப்புத்திட்டக் காணிகளில் 1249 குடும்பங்கள் குடியிருக்கின்றன. இதைப்போலக் கரைச்சிப் பிரதேசத்திலும் 100 வரையான குடும்பங்கள் இப்படியான நிலையில் உள்ளன.

இவர்களுக்கான காணி உரிமப்பத்திரம் வழங்கப்படவில்லை. காணி உரிமப்பத்திரம் இல்லாத காரணத்தினால் இவர்களுக்கான வீட்டுத் திட்டம் கிடைக்கவில்லை. அத்துடன் மலசல கூடம், பிற உதவிகள் என எதையும் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால், இந்த மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர். இந்த மக்களின் நிலையைக் கருத்திற் கொண்டு, இந்தக் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை பிரதேச செயலகம், மாகாண காணி ஆணையாளர், மத்திய அரசின் காணி ஆணையாளர் நாயகம் (கொழும்பு), முந்திய காணி அமைச்சர் ஆகிய தரப்புகளுடன் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தவர் சந்திரகுமார் எம்பி.

ஆனால், இந்தக் காணிகளை மத்திய வகுப்புத்திட்டத்தில் முன்னர் வழங்கப்பட்டவர்களுக்கே கொடுக்க வேண்டும் என்று சொல்லி வருகிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இதற்கான சட்டமூலம் ஒன்றை கடந்த ஆட்சியின்போது நீதி அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீமுடன் இணைந்து பாராளுமன்றத்தில் கொண்டு வர முனைந்தனர் தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் சுமந்திரனும்.

ஆகவே இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தடையாக இருப்பதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத்தான். ஆனால், அதைத் தந்திரமாக மறைக்க முயற்சிக்கிறார் சிறிதரன். இதற்காக அவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு உழவனூரில் ஒரு கூட்டத்தைக் கூட்டி உண்மைக்குப் புறம்பாகக் கதைத்தார்.

இப்பொழுது புதிய ஆட்சியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பிரதேச செயலர் மூலமாக இன்னொரு கூட்டத்தைக் கூட்டி இந்த மக்களை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் சிறிதரன் சொன்ன கதைகளைக் கேட்டு அங்கே இருந்த கிராம அலுவலர்கள் தொடக்கம் பல அதிகாரிகளும் சிரி சிரியென்று சிரித்தார்கள்.

மத்திய வகுப்புத்திட்டக் காணிப் பிரச்சினையைப் பற்றிக் கதைப்பதற்குப் பதிலாக சிறிதரன், ‘பிம்சவிய என்ற ‘மண்ணின் மகிமைத்திட்டம்’ பற்றிக் கதைத்தார். அதாவது ஆட்சியுரிமைச் சட்டத்தையும் மண்ணின் மகிமைத்திட்டத்தையும் போட்டுக் குழப்பினார்.

இதில் அவர் இரண்டு மாங்காய்களை பறிக்கப்பார்த்தார். பிரதேச செயலகத்திலும் பிரதேச மக்களிடமும் தன்னுடைய அதிகாரத்தைக் காட்டுவது. மற்றது காணிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கதைப்பதாகப் பாவ்லா பண்ணுவது…

இதைத்தான் அரசியில் பொய் சொல்லவேணும். அதைப்பற்றிதம் தம்பி, சிறிதரன் எம்.பியிடம் கேளுங்கள் என்றாரோ முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

இதற்குள் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சம்மந்தனையும் மாவையையும் விக்கினேஸ்வரனையும் சி.வீ.கே.சிவஞானத்தையும் மட்டும் முரண்படாமல் பார்த்துக்கொள்கிறார்.

என்னதான் இவர்களுடைய நடவடிக்கைகளின் மீது சிறிதரனுக்கு உடன்பாடில்லாமல் இருந்தாலும் அதையெல்லாம் அவர் கண்டு கொள்வதே இல்லை.

அதேவேளை, இவர்களுடைய அரச ஆதரவு அல்லது சிறிதரனுக்கு உடன்பாடில்லாத நடவடிக்கைகளையே நியாயப்படுத்தி அறிக்கை விடுவதற்கே தன்னுடைய அடிப்பொடிகளைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறார்.

எல்லாம் எதற்காக? அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் சீட்டுக் கிடைப்பதற்காகத்தான்…!!!Post a Comment

Protected by WP Anti Spam