ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கைது!!
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாலம் வனப்பகுதியில், கடந்த 7-ந்தேதி செம்மரங்களை வெட்டி கடத்திச் செல்ல முயன்றதாக கூறி 20 தமிழர்களை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர். இது திட்டமிட்ட படுகொலை என்றும் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி கூலி தொழிலாளர்கள் என்றும் கூறி ஆந்திர அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் மஞ்ஞம் காட்டு பகுதியிலும், கடப்பா மாவட்டத்திலும் சுமார் 130 செம்மர கடத்தல்காரர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திர போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையை தொடர்ந்து கர்னூல் மாவட்டத்தைச் சேரந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் மஸ்தான்வாலி என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர் மண்டல பரிஷியத் உறுப்பினராக இருந்து வருவதாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.