போலி சான்றிதழ் விவகாரம்: மோசடி பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்த முடிவு!!
பிரபலமான பல்கலைக் கழகங்களின் பெயரில் போலியாக கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்ற கோவையை சேர்ந்த சண்முகசுந்தரி, அவருக்கு உடந்தையாக இருந்த கணேஷ்பிரபு, போலி சான்றிதழ் பெற்ற அருண்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சண்முகசுந்தரியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தமிழகம் முழுவதும் கிளை நிறுவனம் துவங்கி ஏராளமானவர்களுக்கு எல்.எல்.பி., எம்.பி.பி.எஸ், என்ஜினீயரிங் உள்ளிட்ட பல்வேறு போலி கல்வி சான்றிதழ்கள் கொடுத்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சண்முகசுந்தரி உள்பட 3 பேரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
போல சான்றிதழ் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் யார்? யார்? அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? அவர்கள் மூலம் போலி சான்றிதழ் பெற்றவர்கள் பற்றிய விவரம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. வெளிமாநில பல்கலைக் கழக ஊழியர்கள் சிலரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து முக்கிய குற்றவாளியான சண்முகசுந்தரியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக முறைப்படி ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் மனு செய்கிறார்கள்.
சண்முகசுந்தரியை போலீசார் கைது செய்தபோது அவரது லேப்–டாப் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். அதில் முக்கிய தகவல்கள் அடங்கிய பைல்கள் ‘பாஸ் வேர்டு’ மூலம் ‘லாக்’ செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதில் போலி சான்றிதழில் தொடர்புடையவர்கள் பற்றிய ரகசிய தகவல்கள் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
எனவே, சண்முகசுந்தரியை காவலில் எடுத்து விசாரிக்கும் போது லேப்–டாப்பில் உள்ள ரகசியத்தையும் பெற போலீசார் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சண்முகசுந்தரியின் கணவர் குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளதால் அவரிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். தலைமறைவான அழகிரி, கார்த்தியேகன் உள்பட பலரை தேடி வருகிறார்கள். சண்முகசுந்தரியை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.