சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஓடும் பஸ்சில் இருந்து பெண் குதித்து தற்கொலை!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் மாயராஜ். இவரது மனைவி சண்முகபிரியா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாயராஜ் சாத்தூரில் இருந்து விளாத்திகுளம் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாயராஜ் பணி முடிந்ததும் வீட்டுக்கு வரவில்லையாம். மேலும் வீட்டு செலவுக்கும் பணம் தர வில்லை என தெரிகிறது.
இதனால் சண்முகபிரியா கணவர் வேலை பார்க்கும் இடத்துக்கு சென்றார். அங்கு மாயராஜை பார்த்து வீட்டுக்கு ஏன் வரவில்லை? என கேட்டார். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்குள் சாத்தூரில் இருந்து விளாத்திகுளத்திற்கு செல்லும் பஸ்சில் மாயராஜ் ஏறினார்.
அப்போது சண்முக பிரியாவும் அந்த பஸ்சில் ஏறி, வீட்டுக்கும் வருவது இல்லை. செலவுக்கும் பணம் தருவது இல்லை என கேட்டார். மாயராஜன் சண்முகபிரியாவை வீட்டுக்கு செல், நான் வருகிறேன் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் வேதனை அடைந்த சண்முகபிரியா ஓடும் பஸ்சில் இருந்து திடீரென குதித்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்