போர்ச்சுக்கல்லை வீழ்த்தி பிரான்சு இறுதி போட்டிக்கு தகுதி

Read Time:4 Minute, 57 Second

Foot-france_potugal.jpgஇறுதி போட்டியில் இத்தாலி அணியுடன் மோத உள்ள மற்றொரு அணியை தேர்வு செய்வதற்கான 2-வது அரை இறுதி ஆட்டத்தில் பிரான்சு-போர்ச் சுக்கல் அணிகள் மோதின. இரு அணிகளுமே பலம் வாய்ந்தது என்பதால் ஆட்டத்தின் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. முதல் நிமிடத்திலேயே பிரான்சு நடுகள வீரர் மால்டாவுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை அவர் தவறவிட்டார்.

8-வது நிமிடத்தில் போர்ச்சுக்கலின் முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அருமையான முறையில் மனிச்க்கு பேக் பாஸ் செய்தார். இதை மனிச் பெற்று 25 மீட்டர் தூரத்தில் இருந்து கோல் வளையை நோக்கி அடித்தார். ஆனால் அது கோல் கம்பத்திற்கு மேல் சென்றது.

15-வது நிமிடத்தில் முன்கள வீரரான பிகோ கோல் கம்பம் அருகே முன்னேறிச் சென்று பந்தை கோல் வளையை நோக்கி அடித்தார். இதை பிரான்சு கோல்கீப்பர் பார்த்தாஸ் அருமையாக தடுத்தார்.

போர்ச்சுக்கல் அணியின் பின்களம் சிறப்பாக இருந்ததால் பிரான்சு அணி கோல் அடிக்க திணறியது. 32வது நிமிடத்தில் பெனால்டி எல்லையில் வைத்து பிரான்சின் முன்கள வீரரான தியரி ஹென்ரியை போர்ச்சுக்கல்லின் பின்கள வீரர் கார்வல்கோ தடுத்தார். இதனால் பிரான்சுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி கேப்டன் ஷீடேன் கோல் அடித்தார்.

கோல் வாங்கிய அதிர்ச்சியில் போர்ச்சுக்கல் வீரர்கள் தாக்குதல் ஆட்டம் நடத்தினர். இதனால் ஆட்டத்தின் விறுவிறுப்பு அதிகமானது. 38வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் கம்பம் அருகே முன்னேறிச்சென்று கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து மயிரிழையில் கோல் கம்பத்திற்கு மேலே சென்றது. முதல் பாதியில் பிரான்சு 1-0 என முன்னிலை பெற்றது.

2-வது பாதியில் போர்ச்சுக்கல் வீரர்கள் முன்னேறி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டார்கள். அதே சமயத்தில் பிரான்சு பின்கள வீரர்கள் கோல் விழாதவாறு தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டு நேரத்தை கடத்துவதிலேயே முனைப்பாக இருந்தார்கள். பிகோ, டிகோ போன்றவர்கள் ஏமாற்றம் அளித்ததால் போர்ச்சுக்கல் வீரர்களை மாற்றி பார்த்தது. அதற்கும் சரியான பலன் கிடைக்கவில்லை.

77-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல்லுக்கு பிரீகிக் வாய்ப்பு கிடைத்தது. முன்கள வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலை நோக்கி அடித்தார். ஆனால் பிரான்சு கோல் கீப்பர் பார்த்தாஸ் தடுத்தார்.

அவர் நெஞ்சில் பட்டு பந்து நழுவியது. உடனே பிகோ அதை தலையால் முட்டி கோலாக்க முயன்றார். துரதிஷ்டவசமாக மயிரிழையில் பந்து கோல் கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்றது.

ஆட்டம் முடிய 4 நிமிடங்களே இருந்த நிலையில் பிரான்சு அணியின் பின்களத்தை மீறி போர்ச்சுக்கல் வீரர்கள் கடுமையான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போர்ச்சுக்கல் கோல் அடித்து சமநிலையை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

அவர்கள் 4 முறை கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அனைத்தும் கோல் கம்பத்திற்கு மேலே சென்று பலன் அளிக்காமல் போனது. முடிவில் போர்ச்சுக்கல் போராடி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் பிரான்சு அணி இறுதி போட்டியில் 9-ந்தேதி இத்தாலியுடன் சாம்பியன் பட்டம் வெல்ல மோதுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post TMVP பிரதிநிதிகளுடன் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தலைமையிலான குழுவினர் சந்திப்பு
Next post விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துங்கள்:-JVP