டெல்லி: பியூட்டி பார்லரில் அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது!!
டெல்லியில் பியூட்டி பார்லரில் வைத்து அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வர்த்தக விஷயமாக இந்தியா வந்துள்ள 35 வயதான அமெரிக்க பெண் தெற்கு டெல்லியில் உள்ள கைலாஷ் பகுதியில் வசித்து வருகிறார். இவர், கடந்த புதன் அன்று மாலை அப்பகுதியிலுள்ள பியூட்டி பார்லர் ஒன்றிற்கு முடி வெட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அமித்(25) என்ற வாலிபன் தலையில் மசாஜ் செய்து விடுவதாகக் கூறி அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான்.
வாலிபனின் கீழ்த்தரமான செய்கையால் பதறிப் போன அமெரிக்கப் பெண் அலற, அமித் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளான். பின் அவர் தன் நண்பர்களின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பியூட்டி பார்லர் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போலீசார் அமித்தின் வீட்டிலும் சோதனை செய்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த அமித்தை நேற்று போலீசார் கைது செய்தனர். விரைவில் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.