செக்ஸ் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் பிரகாஷ் விடுதலை!!
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் (54). மூட்டு சிகிச்சை நிபுணர்.
2001–ம் ஆண்டு இவரது மருத்துவ மனையில் கம்பவுண்டராக வேலை பார்த்தவர் கணேசன் (24). புதுச்சேரியை சேர்ந்த இவர் வடபழனியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில், கணேசன் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ‘செக்ஸ்’ காட்சிகள் இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து, அவர் வடபழனி போலீசில் ஒரு புகார் மனு கொடுததார். அதில், அண்ணா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் பணிபுரியும் தன்னை அந்த மருத்துவமனையை நடத்தும் டாக்டர் பிரகாஷ் மிரட்டி பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கச்செய்து வீடியோ எடுத்ததாகவும், பின்னர் அதை இண்டர் நெட்டில் வெளியிட்டதாகவும் கூறி இருந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், டாக்டர் பிரகாஷ் இந்த செக்ஸ் படங்களை எடுத்து அமெரிக்காவில் உள்ள தனது உறவினருக்கு அனுப்பி, அங்கிருந்து இண்டர் நெட்டில் வெளியிட்டது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர் பிரகாஷ் கைதானார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக சரவணன் (25), விஜயன் (24) நிக்சன் (24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்த சித்ரா என்பவர் இந்த படங்களை எடுத்தது தெரியவந்தது. அவர் அப்ரூவராக மாறியதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சென்னை விரைவு கோர்ட்டில் நடந்த டாக்டர் பிரகாஷ் மீதான ‘செக்ஸ்’ குற்றச்சாட்டு வழக்கு விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 2008–ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் டாக்டர் பிரகாசுக்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது மற்றும் கொலை மிரட்டல் குற்றத்துக்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட மேலும் 3 பேரில் நிக்சன் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர்கள் சிறை தண்டனை காலம் முடிந்ததும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, 2009–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தன்னை விடுதலை செய்யக்கோரி டாக்டர் பிரகாஷ் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன் மீதான விசாரணை நடந்து வந்தது. நேற்று நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் முன்னிலையில் இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது டாக்டர் பிரகாஷ் சார்பில் ஆஜரான வக்கீல், டாக்டர் பிரகாஷ் சிறந்த மருத்துவ நிபுணர். அறிவுத்திறன் மிக்கவர். அவர் தனது தவறை உணர்ந்து திருந்திவிட்டார். ஜெயிலில் இருந்த காலத்தில் ஆன்மீகம் மற்றும் அறிவியல் தொடர்பாக 150க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார்.
கடந்த 13 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களாக தொடர்ந்து சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். எனவே, நன்நடத்தையை கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் டாக்டர் பிரகாஷ் இதுவரை அனுபவித்த தண்டனையை முழு தண்டனை காலமாக கருதி, நன்நடத்தை காரணமாக விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
டாக்டர் பிரகாஷ் வசதியானவர். எனவே, அவருக்கு விதித்துள்ள அபராதம் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்தை செலுத்தி விட்டு விடுதலை ஆகலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து அபராதத்தை செலுத்திய டாக்டர் பிரகாஷ் 13 வருடம் 3 மாதம் சிறை வாசத்தை முடித்து விடுதலை ஆனார்.