வகுப்புக்கு ஒழுங்காக செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை!!
கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒத்தகால்மண்டபம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் சகாயராஜ்.
இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மகன் இம்மானுவேல் பீட்டர் (வயது 19) அப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இம்மானுவேல் ஒழுங்காக கல்லூரிக்கு செல்வது கிடையாதாம். இதனால் கடந்த ஆண்டு தேர்வு எழுத முடியாமல் போனது.
இந்த ஆண்டும் இம்மானுவேல் பீட்டர் ஒழுங்காக வகுப்புகளுக்கு செல்லவில்லை. இதையறிந்த அவரது பெற்றோர் இம்மானுவேல் பீட்டரை கண்டித்தனர்.
இந்த நிலையில் நேற்று சகாயராஜ் மற்றும் அவரது மனைவி, இளைய மகன் ஆகியோர் அருகே உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றனர். இம்மானுவேல் பீட்டர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
மாலையில் சகாயராஜ் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் ஒரு அறையில் இம்மானுவேல் பீட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைக்கண்ட அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்தே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.