முஷரப் வழக்கில் 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும்; சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

Read Time:3 Minute, 15 Second

பாகிஸ்தான் அதிபர் முஷரப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது செல்லாது என்று அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் 10 நாட்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என்று 11 நீதிபதிகள் பெஞ்ச் அறிவித்தது. பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்தது. இதில் ராணுவத்தளபதி பதவியில் இருந்தபடி முஷரப் போட்டியிட்டார். இதை எதிர்த்து பலர் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஜாவேத் இக்பால் தலைமையிலான 11 நீதிபதிகள் கொண்ட பெஞ்சு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முஷரப்பை எதிர்த்து போட்டியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி வஜிகுதீன் அகமதுவும் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இதை முழு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். நீதிபதி ஜாவேத் இக்பால் இந்த வழக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு தான். எனவே முழு பெஞ்சு தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உடனடியாக முழு பெஞ்சை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி மறுத்துவிட்டார். பல நீதிபதிகள் இந்த வழக்கு பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். சில நீதிபதிகள் ஊரில் இல்லை. எனவே 11 நீதிபதிகள் கொண்ட பெஞ்சே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி ஜாவேத் இக்பால் கூறுகையில், இந்த வழக்கை என் தலைமையிலான பெஞ்சு விசாரணை நடத்தி 10 அல்லது 12 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கும் என்று அறிவித்தார்.

இதற்கிடையில் தேர்தலில் வெற்றி பெற்றபோதிலும், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு கோர்ட்டு தடை விதித்து உள்ளது. இந்த நிலையில், தன் எதிர்கால நடவடிக்கை குறித்து கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு அறிவிப்பேன் என்று முஷரப் கூறி இருப்பதால் தீர்ப்பு அவருக்கு எதிராக வரும் பட்சத்தில் ராணுவ ஆட்சியை அவர் அறிவிப்பார் என்று வதந்தி கிளம்பி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆபாச படமெடுத்து மிரட்டல்- பெண் புகார்
Next post இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்க செக்கோஸ்லவாக்கியா முன்வந்துள்ளது