குழந்தையை பறித்து மருமகளை சித்திரவதை செய்த மாமியார் கைது

Read Time:7 Minute, 43 Second

சென்னை கீழ்பாக்கம் கார்டன் பகுதியில் வசிக்கும் மார்வாடி தொழில் அதிபர் மகள் சந்தோஷ் விபுலுக்கு கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவரது கணவர் பெயர் விபுல்ஷா. இவர் அமெரிக்காவில் வேலையில் உள்ளார். இவர்களுக்கு குஷிஷா என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. கணவருடன் இல்லற வாழ்க்கையில் வீசிய புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட சந்தோஷ்ஷா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எல்லா பெண்களையும் போல நானும் ஆயிரம் கனவுகளை மனதில் சுமந்து எனது இல்லற வாழ்க்கையில் நுழைந்தேன். சில மாதங்கள் மட்டுமே எனது இல்லற வாழ்க்கை சுகமாக இருந்தது. அதன்பிறகு எனது வாழ்க்கையில் மாமனார், மாமியார், நாத்தனார் என்று எனது கணவரின் ரத்த உறவுகள் மூலம் நான் பெரிதும் துன்பத்திற்கு ஆளானேன். எனது கணவர் அமெரிக்காவில் வேலையில் உள்ளார். திருமணம் முடிந்தவுடன் எனது கணவருடன் கூட்டு குடும்பமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நான் வசித்தேன். 100 சவரன் நகை திருமணத்தின் போது எனது பெற்றோர் 100 சவரன் தங்க நகைகள்போட்டு ரூ.10 லட்சம் செலவழித்தார்கள். அதன் பிறகு வீடு வாங்க வேண்டும் என்று சொல்லி மீண்டும் எனது பெற்றோரிடம் எனது கணவர் ரூ.2 லட்சம் பணம் வாங்கினார். பின்னர் அமெரிக்கா போவதற்கு செலவுக்கு தேவை என்று சொல்லி மேலும் ரூ.10 லட்சம் எனது பெற்றோரிடம் கேட்டார்கள். இதற்கு பணம் கொடுக்க எனது பெற்றோர் சம்மதிக்கவில்லை.இதனால் கோபம் கொண்ட எனது கணவர் என்னை அமெரிக்காவிற்கு அழைத்து போகாமல், ஆமதாபாத்திலேயே விட்டு சென்று விட்டார். அதன் பிறகு அவர் என்னுடன் பேச மாட்டார். அமெரிக்காவிற்கு போனில் தொடர்பு கொண்டு பேசினால் கூட அவர் என்னிடம் பேச மாட்டார்.

சித்திரவதை

இதற்கிடையில், எனது மாமனார், மாமியார், மிகவும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்கள். கழிவறையை சுத்தம் செய்ய சொல்வார்கள். சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவார்கள். சில நாட்கள் தரையில் படுக்கச் சொல்லி அடித்து துன்புறுத்துவார்கள். கொடுமை தாங்காமல் நான் எனது குழந்தையுடன் சென்னை வந்து எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். நான் சென்னைக்கு வரும்போது, எனது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த 100 சவரன் நகைகளையும், எனது மாமியார் பறித்துக் கொண்டார். எனது குழந்தையை சென்னையில் படிக்க வைத்தேன்.

இந்தநிலையில், எனது மாமியார் சென்னை வந்து மனது மாறியவர் போல் நடித்தார். எனது மாமனார், உயிருக்கு ஆபத்தான நிலையில், படுக்கையில் படுத்திருப்பதாகவும், எனது குழந்தையை பார்க்க ஆசைப்படுவதாகவும் கூறினார். இதை உண்மை என்று நம்பி, நானும், குழந்தையுடன் ஆமதாபாத் சென்றேன். அங்கு போனபிறகுதான் எனது மாமியாரின் கபட நாடகம் தெரியவந்தது.

குழந்தை பறிப்பு

அங்கு போனதும், எனது மாமனாருக்கு உடல்நிலை பாதிப்பு எதுவும் இல்லை என்றும், எனது குழந்தையை பறிப்பதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றினார்கள் என்பதும் தெரியவந்தது. எனது குழந்தையை பறித்துக் கொண்டு என்னை விரட்டி அடித்துவிட்டார்கள். நான், ரெயில் ஏறி அவர்களிடமிருந்து தப்பித்து சென்னை வந்து சேர்ந்தேன். தற்போது, எவ்வளவோ முயற்சி செய்தும் எனது குழந்தையை என்னிடம் கொடுக்க மறுக்கிறார்கள்.

ரூ.50 லட்சம் கொடுத்தால் என்னை ஏற்றுக்கொண்டு, கணவரோடு அமெரிக்காவில் சேர்ந்து வசிக்க அனுமதிப்பதாக சொல்கிறார்கள். எனது கணவரை, போனில் தொடர்பு கொண்டு பேசியபோது அவரும், இதே கருத்தைத் தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி எனது குழந்தையை மனநோய் டாக்டரிடம் அழைத்து சென்று ஏதேதோ மாத்திரைகளை கொடுத்து சாப்பிட கொடுத்து வருகிறார்கள். இதனால் எனது குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, எனது குழந்தையை மீட்டுத் தருவதோடு, எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

மாமியார் கைது

இந்த புகார்மனு தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம், துணை கமிஷனர் விஜயகுமாரி, உதவி கமிஷனர் ராஜாமணி ஆகியோர் மேற்பார்வையில் கீழ்ப்பாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, இது தொடர்பாக சந்தோஷ் ஷாவின் கணவர் விபுல் ஷா, மாமனார் ஈஷ்வர் ஷா, மாமியார் புஷ்பாதேவி ஷா, அவர்களது உறவினர்கள் ஜெயஸ்ரீ, ஸ்வீட்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

தனிப்படை போலீசார், ஆமதாபாத் சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசை பார்த்ததும், குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் தப்பியோடி விட்டனர். புஷ்பாதேவி ஷா மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அங்கிருந்து குழந்தையையும் போலீசார் மீட்டனர். தாய் சந்தோஷ் ஷாவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர், புஷ்பாதேவியை கைது செய்து அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர், சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் புஷ்பாதேவி ஷா அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அனுராதபுரம் “எல்லாளன் நடவடிக்கை”: தாக்குதலில் பலியான 21கரும்புலிகளின் பெயர்களையும் புலிகள் அறிவித்துள்ளனர்… (தாக்குதலில் பலியானவர்களின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)
Next post தந்தையை தாய்நாட்டுக்கு அனுப்ப அமெரிக்க இந்தியரின் கொடூரம்