கலிபோர்னியாவில் காட்டுத் தீ: 5 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவு; தீயில் கருகி 5 பேர் பலி; 1,500 வீடுகள் எரிந்து சாம்பல்

Read Time:2 Minute, 58 Second

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். 1,500 வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதை தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் 5 லட்சம் பேரை வீடுகளை விட்டு வெளியேறும்படி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வடக்கே உள்ள பிரபலங்கள் வசிக்கும் மாலிபு என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முதலாக காட்டுத் தீ பற்றியது. தீயை அணைக்க 500 வண்டிகள் அனுப்பப்பட்டபோதிலும் முழுமையாக அணைக்கமுடியவில்லை. காற்று பலமாக வீசியதால் தீ மளமள என்று பற்றி பரவியது. சில இடங்களில் தீ கொளுந்து விட்டு 100அடி உயரத்துக்கு எரிகிறது. 1220 கி.மீ பரப்புக்கு தீ அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி விட்டது. கிட்டத்தட்ட 12-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பற்றி எரிகிறது. தீக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒருவர் தான் பலியாகி இருந்தார். இப்போது மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். 18 தீ அணைக்கும் படை வீரர்கள் உள்பட 36 பேர் காயம் அடைந்தனர். கிட்டத்தட்ட 1,500 வீடுகள் தீயில் கருகி சாம்பலாயின. பெரும்பாலான வீடுகள் சான்டீகோ நகரில் உள்ளவை ஆகும்.

தீ பரவி உள்ள பகுதிகளில் வசிக்கும் 5 லட்சம் பேரை வீடுகளை விட்டு வெளியேறும்படி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்று 5 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். தீயால் கோடிக்கணக்கான ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மாநில கவர்னர் அர்னால்டு ஷ்வார்ஸ்நேகர் தெரிவித்தார்.

நெருக்கடி நிலை பிரகடனம்

தீ பற்றி எரியும் பகுதிகளில் நெருக்கடி நிலையை ஜனாதிபதி புஷ் பிரகடனம் செய்தார். அதோடு அந்த பகுதிக்கு இன்று (வியாழக்கிழமை) புஷ் சென்று பார்வையிட இருக்கிறார். தீயை அணைக்கும் பணியில் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டு இருப்பதாக கவர்னர் தெரிவித்தார். மேலும் 68 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைக்கப்பட வேண்டும். இலங்கையிடம் அமெரிக்கா வேண்டுகோள்
Next post ஆபரேஷன் செய்தபோது 9 மாத குழந்தையின் நெஞ்சுக்குள் டாலரை வைத்து தைத்த டாக்டர்கள்