விடுதலைப் புலிகளின் உடல்கள் நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டமைக்கு இடதுசாரி முன்னணி கடும் கண்டனம்

Read Time:2 Minute, 54 Second

அநுராதபுரம் விமானப்படைத்தள தாக்குதலின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டமையை இடதுசாரி முன்னணி வன்மையாக கண்டித்துள்ளது. இன்றைய நாகரிக உலகில் மனித கௌரவத்தை மதிக்கும் எவரும் இந்த ஈனச் செயலை செய்யமாட்டார்கள் என தெரிவித்திருக்கும் மேற்படி அமைப்பு, இச் செயலுக்கு பாதுகாப்பு தரப்பினர் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இடதுசாரி முன்னணியின் பிரசார செயலாளர் ரணத்குமாரசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலத்தில் தென்னிலங்கையில் நடைபெற்ற போராட்டங்களின் போது அரசபடைகள் கொல்லப்பட்ட போராளிகளின் சடலங்கள் விடயத்தில் நடந்துகொண்ட விதம் தொடர்பாகவும் தனது கருத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் அந்த அறிக்கையில், படையினரின் கீழ்த்தரமான இந்த நடவடிக்கையை அநுராதபுரம் ஆயரே கண்டித்துள்ளார். 1988 – 1989 காலப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி.யினரை கொன்ற இராணுவத்தினர் அவர்களின் உடல்களை வீதியில் உருக்குலைந்த நிலையில் போட்டிருந்தனர். இவ் உடல்களை நாய்களும், ஏனையவையும் கடித்து குதறியது வரலாறு ஆகும். ஆனால், அன்று நாம் இந்த காட்டுமிராண்டித்தன செயற்பாட்டை வன்மையாக கண்டித்ததுடன் அதற்கு எதிராக பல போராட்டங்களையும் நடாத்தியிருந்தோம். இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அந்த போராட்டங்களில் எம்முடன் இணைந்திருந்தார். ஆனால், அவரின் ஆட்சியில் விடுதலை போராளிகளின் உடல்கள் நிர்வாணமாக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்றைய அரசு போரை தொடர்ந்தும் முன்னெடுப்பதால் நாட்டு மக்கள் உணவுக்காக ஏங்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுதிரண்டு போராட முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்காவில் புலிகளுக்கு எதிராக மூன்றாவது வழக்கு
Next post பால்மா வாங்க பணம் இல்லை இளம் தாய் தற்கொலை