இரண்டடுக்கு சூப்பர் ஜம்போ விமானம் : `ஏர் பஸ் ஏ-380′ சிட்னிக்கு முதல் பயணம்

Read Time:3 Minute, 12 Second

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ் ஏ-380, முதல் முறையாக வர்த்தக ரீதியிலான பயணத்தை துவக்கியது. சிங்கப்பூரில் புறப்பட்ட இந்த `சூப்பர் ஜம்போ’ விமானம், ஏழு மணி நேர பயணத்துக்குப் பிறகு ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் தரை இறங்கியது. இதுவரை, 40 ஆண்டுகளாக போயிங் 747 ரக விமானம் தான் உலகிலேயே பெரிய விமானமாக இருந்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர் பஸ் ஏ-380 விமானத்தை வாங்க முடிவு செய்தது. இரண்டு அடுக்கு கொண்ட இந்த விமானத்தை கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், கடந்த வாரம் தான் இந்த விமானம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விமானத்தில் 850 பேர் பயணம் செய்யலாம். வர்த்தக ரீதியிலான முதல் பயணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து சிட்னி செல்லும் இந்த விமானத்துக்கு, ஆன்-லைன் ஏலம் மூலம் ஏலத்தில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டன. டிக்கெட்கள் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.41 லட்சம் வரை விற்பனையானது. விமானத்தில் 850 பேர் பயணம் செய்ய வசதி இருந்தும், நேற்று முதல் முறையாக வர்த்தக ரீதியில் பறந்த இந்த விமானத்தில் 450 பயணிகள் மட்டுமே இருந்தனர். விமானம் புறப்படுவதை வேடிக்கை பார்க்க, சிங்கப்பூர் விமான நிலையத்தில் நுாற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இந்த விமானத்தின் இறக்கை மற்றும் நீளத்தின்படி பார்த்தால், கால்பந்து மைதானத்தின் பரப்பளவுக்கு இருக்கிறது. இந்த விமானம் தரையிறங்குவதற்கும், நிறுத்துவதற்கும், சிட்னி விமான நிலையம் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த விமானத்துக்கென்றே இரண்டு அடுக்கு கொண்ட, பயணிகள் நடந்து செல்லும் மேடை பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. இந்த விமானம் தரையிறங்குவதை பார்ப்பதற்கு சிட்னி விமான நிலையத்திலும் ஏராளமானோர் கூடியிருந்தனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், இதே போன்ற ஏ-380 ரகத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து விமானங்களை வாங்க உள்ளது. இந்த ரகத்தைச் சேர்ந்த 20 விமானங்களை பல்வேறு விமான நிறுவனங்களும் வாங்க திட்டமிட்டு, ஆர்டர் கொடுத்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இன்டர்நெட் பயன்படுத்துவோர் உஷார்: அடையாளம் திருடி பெரும் மோசடி
Next post இந்தோனேஷியாவில்: படகு கவிழ்ந்து 30 பேர் பலி