By 10 June 2015 0 Comments

விடுதலைப் புலிகள் எழிலன் சரணடைதல்: “கனிமொழியும், ஆனந்தியும்”… -தமிழ்ப்புதல்வன்- (கட்டுரை)!!

timthumb (10)இரண்டு நாடுகள், இரண்டு அரசியல்வாதிகள், இரண்டு பெண்கள், இரண்டு தமிழர்கள், இரண்டு கருத்துக்கள் ஆனால் ஒரே சம்பவம்! இதுதான் முள்ளிவாய்க்காலில் காணாமற் போனோரின் சோகக்கதை. அது 6 வருடங்கள் கடந்து தற்போது சுவாரஸ்யமான கதையாக மாறியுள்ளது.

“ஆனந்தி பொய் பேசமாட்டாள், கனிமொழி பதில் சொல்லியே ஆகவேண்டும்” என்று நெடுமாறன் போன்றவர்கள் அறிக்கையிட, “அப்பொழுது கனிமொழியின் தந்தையே தமிழக முதல்வர். அவர் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர். யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டதாக அறிக்கையும் விட்டவர். ஆகவே இதற்கு தி.மு.க. தான் பதில் சொல்ல வேண்டும்” என்று இன்னும் சிலர் பேட்டி கொடுக்க. வேறு சிலர் “ கனிமொழி, கருணாநிதி ஆகியோர் முன்னைய ஆட்சியிலிருந்தவர்கள். அவர்கள் எடுத்த தீர்மானங்களுக்கு தமிழக அரசே பதில் கூறவேண்டும்.” என்று கருத்து வெளியிடுகின்றனர்.

கிளம்பியுள்ள புதிய சர்ச்சையால் காணமற் போனோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிவர வாய்ப்புகள் உள்ளது என்று நினைத்துவிட முடியாது. இதுவும் ஒரு திசைத் திருப்பும் நாடகமாகவே தென்படுகிறது. ஆனாலும் இந்த நாடகத்திலிருந்தும் சில படிப்பினைகளை தமிழர்களுக்கு உள்ளது என்பதை காண்பிப்பதற்காகவே இந்த கட்டுரை எழுதப்படுகிறது.

Ananthi-Sasi

ஆனந்தி சசிதரனின் குற்றச்சாட்டு…

முதலாவது ஆனந்தியின் குற்றச்சாட்டை பார்ப்போம். “எனது கணவர் சசிதரன், இயக்கத்தில் அவர் பெயர் எழிலன். அவர் இலங்கை இராணுவத்திடம் சரணடைய முன்பு கனிமொழியை செட்லைட் தொலை பேசியில் தொடர்பு கொண்டார். கனிமொழி அவருக்கு, சரணடையுமாறு ஆலோசனை வழங்கினார். அதற்கு அமையவே இயக்க தலைவர்கள் அநேகர் சரணடைந்தனர். கடந்த 6 வருடங்களாகியும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது.”

கனிமொழியின் பதில்…

அதற்கு கனிமொழியின் பதில் “எனக்கு எழிலன் யார் என்றே தெரியாது. அவர் விடுதலை புலிகளின் தலைவர்களில் ஒருவரும் அல்ல. யுத்தத்தின் உச்ச கட்டத்தில் அப்படி சரணடைய சொல்வேனா?” என்பதாகும்.

ஆனந்தியின் குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா?? என்பதை விடவும் கனிமொழியின் பதிலில் மறைந்துள்ள சில தகவல்களுக்கு அவதானத்தை செலுத்துவோம்…

1. “எழிலன் விடுதலை புலிகளின் தலைவர்களில் ஒருவர் அல்ல” என்பதிலிருந்து, கனிமொழி விடுதலை புலிகளின் தலைவர்களுடன் தொடர்ப்பை பேணிவந்தவர் என்பது புரிகிறது.

2. “யுத்தத்தின் உச்ச கட்டத்தில் சரணடைய சொல்வேனா?” என்பதிலிருந்து, இவரும் ஈழ யுத்தத்தை பின்நின்று நடத்தியவர்களில் ஒருவர் என்பது தெளிவாகின்றது.

3. கருணாநிதியின் அரசு நடந்து கொண்ட விதத்தையும். அவர் நடத்திய நாடகங்களையும் பார்க்கும் போது, மாவிலாறுவில் ஆரம்பித்த போர், தமிழக அரசின் தேவைக்காகவே நடந்தேறிய நாடகமாகவும் என்பது வெளிப்படுகிறது.

ஆனந்தியின் குற்றச்சாட்டை நோக்கும் போதும் இதற்கு ஒப்பான சில கருத்துக்களை அவதானிக்கலாம்…..

1. “இலங்கை இராணுவத்திடம் சரணடைய முன்பு, கனிமொழியை தொடர்பு கொண்டார்” என்பதிலிருந்து விடுதலைப் புலிகள், தமிழகத்தின் பொம்மைகளாகவே செயல்பட்டார்கள் என்பது புரிகின்றது.

2. “கனிமொழி சரணடைய சொன்னதால் தான் எனது கணவர் சரணடைந்தார்” என்பது கனிமொழி விடுதலைப் புலிகளின் கட்டளையிடும் அதிகாரியாகவும் செயல்பட்டுள்ளார் என்பதாகவும் புரிந்து கொள்ளலாம்.

3. சரணடைந்தவர்கள் தமிழக அரசியல்வாதிகளை நம்பி வீ ணாய்ப் போனார்களா? 30 வருடகால யுத்தமே தமிழக அரசியலுக்கு தீனிபோட்டதா? என்ற சந்தேகங்களுக்கும் ஆனந்தியின் குற்றச்சாட்டில் பதில் இருப்பது போல்தான் தெரிகிறது.

6 வயதுக்கு குறைந்த ஈழக் குழந்தைகளுக்கு ஈழப்போர் இன்னுமொரு கதையாகவே உள்ளது. இன்னும் சில வருடங்களில் ஈழப்போரின் அனைத்து உண்மைகளும் வெளிப்படும் போது ஈழத்தின் அடுத்த தலைமுறையினர், தமது முன்னோர்களை வீரர்களாக பார்ப்பார்களா? வேடிக்கையாக பார்ப்பார்களா?? என்று பொருத்திருந்து பார்ப்போம்.

இலவசம் என்று ஒன்று உலகில் இல்லை எனபதை இன்றைய ஈழத்து வாலிபர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவோ, தமிழகமோ நம்மீது இரக்கப்பட்டு, நமக்கு குரல் கொடுக்கின்றது என்றோ, நம்மை பாதுகாக்க முடியுமான ஒரே நாடு இந்தியா என்றோ நாம் இன்னும் நினைத்துக் கொண்டிருந்தால் இன்னும் நாங்கள் உறக்கத்தில் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. 30 வருட கால சரித்திரத்தை புரட்டிப் பார்த்தாலும் அது நன்றாக புரியும்.

தமிழக அரசியல்வாதிகள் ஈழத் தமிழர் மீது அவ்வளவு அக்கறையுள்ளவர்கள் என்றால், தமிழகத்தில் அகதிகளாக வாழும் ஈழ தமிழருக்கு இந்திய பிரஜா உரிமையை கொடுத்து இந்தியர்களுக்கு இருக்கும் அத்தனை சலுகைகளையும் கொடுத்திருப்பார்கள். அப்படி நடந்ததாக இன்றுவரை ஒரு தகவலும் நான் காணவில்லை.

உண்மையாகவே தமிழக அரசுக்கு ஈழ தமிழர் மீது அனுதாபம் இருந்திருந்தால் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து கடைசிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாகாமல் காப்பாற்றப்பட உதவியாயிருந்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை.

இந்திய தமிழர்களை திருப்திப்படுத்த சில நாடகங்களை அரங்கேற்றியதோடு நின்று கொண்டது. அதில் ஒரு நாடகமாகவே கனிமொழியின் “செட்லைட் பேசி” நாடகத்தையும் பார்க்க முடிகிறது.

புலிகளின் தளபதி எழிலன் சரணடைய முன், கனிமொழியை தொடர்பு கொண்டாரா? இல்லையா?? என்ற விவாதத்தை ஒருபுறம் வைத்து விட்டு, அடுத்த தலைமுறை இந்தியாவின் தந்திரங்களில் சிக்கிக் கொள்ளாமல் தனது உரிமைகளை வென்றெடுக்க தனக்கே உரித்தான ஒரு பாணியை தெரிவு செய்துகொள்ள வேண்டும்.

நேற்றைய தினத்தை நினைத்து வருந்துவது அவசியம் தான். நாளையை தினத்தை குறித்து கனவு காண்பதும் அவசியம் தான். அதற்காக இன்றைய தினத்தில் தூங்கிக் கொண்டே இருக்கக்கூடாது. “முள்ளிவாய்க்கால் கற்றுத்தந்த பாடங்களில் இந்த கனிமொழி, ஆனந்தியையும் மறந்து விடாதிருப்போம்”..!!

-தமிழ்ப்புதல்வன்-Post a Comment

Protected by WP Anti Spam