By 27 June 2015 0 Comments

மர்மமாக இறந்த என்ஜினீயரிங் பட்டதாரி உடல் இன்று பரிசோதனை: ஓமலூரில் போலீஸ் குவிப்பு!!

df3eb3b5-4b01-4527-b591-2ae82dbebef5_S_secvpfசேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணி புரிந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சித்ரா. இவர்களது இளைய மகன் கோகுல்ராஜ் (வயது 23). இவர் பி.இ. முடித்துவிட்டு ஓமலூர் பகுதியில் கேம் சென்டர் வைத்து நடத்தி வந்தார்.

இவர் கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த போது திருச்செங்கோடு கந்தசாமிபாளையத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் நட்பாக பழகினார். கடந்த ஆண்டு இருவரும் படிப்பை முடித்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோகுல்ராஜ் அந்த பெண்ணுடன் திருச்செங்கோடு மலைக்கோவிலுக்கு சென்றார், அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் இளம்பெண்ணை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர். மேலும் அவரை அங்கிருந்து விரட்டி விட்டனர்.

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள தொட்டிப்பாளையம் என்ற இடத்தில் முகம் சிதைந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது அவரை யாராவது கொன்று பிணத்தை தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்பது மர்மமாக உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

கோகுல்ராஜ் இறந்தது குறித்து அவரது தாய் சித்ராவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா மற்றும் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் கோகுல்ராஜ் சாவில் மர்மம் இருப்பதாகவும், குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோல் திருச்செங்கோட்டிலும் விடுதலை சிறுத்தை மற்றும் ஆதிதமிழர் கட்சி தொண்டர்கள் கோகுல்ராஜ் வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலும் செய்தனர். இதனால் போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 124 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கோகுல்ராஜ் உடல் மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று பிற்பகலில் அவரது உடல் சேலம் கொண்டு வந்து பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது.

இதை அறிந்த கோகுல் ராஜின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டனர். இதனால் இங்கும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேலம் மாநகர துணை கமிஷனர் செல்வராஜன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கோகுல்ராஜ் எப்படி இறந்தார்? என ரெயில்வே போலீஸ் துணை கண்காணிப்பாளர் தில்லை நடராஜன், போத்தனூர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதால் வழக்கு விசாரணை உள்ளூர் போலீசுக்கு மாற்ற உயர் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதன் பேரில் இந்த வழக்கு விசாரணை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை உள்ளூர் போலீசுக்கு மாற்றப்பட்டதும் அவர்கள் விசாரிப்பார்கள். இதன் பின்னர் கோகுல்ராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும். இன்று பிற்பகலில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.

இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோகுல் ராஜ் சாவில் சந்தேகம் உள்ளது என கூறி சில அமைப்புகள் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் அல்லது சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோகுல்ராஜின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஓமலூருக்கு எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் ஓமலூரில் உள்ள கோகுல்ராஜின் வீட்டு முன்பும் மற்றும் சாஸ்தா நகர், பஸ் நிலையம், தாலுகா அலுவலகம், கருப்பண்ணபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், சுடுகாடு பகுதியிலும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஓமலூர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.Post a Comment

Protected by WP Anti Spam