தேரூர் இரட்டை கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சென்னையில் கைது!!
நாகர்கோவிலை அடுத்த தேரூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வன ஊழியர். இவரது மனைவி யோகீஸ்வரி.
இருவரும் கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்து விட்டு ஊர் திரும்பிய போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரட்டை கொலை வழக்கில் மாவட்டத்தின் பிரபல ரவுடிகள் மற்றும் கூலிப்படையினருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி முதற்கட்டமாக முண்டக்கண் மோகன் உள்பட சிலரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த இரட்டைக்கொலையின் முக்கிய குற்றவாளி செந்தில் என்ற தாத்தா செந்தில் என்பதை தெரிந்து கொண்டனர். அவரை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்ட போது தாத்தா செந்தில் தலைமறைவாகி விட்டார்.
இவர் கடந்த 2010–ம் ஆண்டே பெருவிளை மோகன் கொலை வழக்கின் குற்றவாளி என்பதும், இதற்காக கைது செய்யப்பட்ட தாத்தா செந்தில் பின்னர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானதும் தெரிய வந்தது. அவர் ஜாமீனில் வந்த பின்பே ஆறுமுகம்–யோகீஸ்வரி கொலை நடந்தது. எனவே இந்த கொலையிலும் தாத்தா செந்திலுக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்தது. அவரை பிடித்து விட்டால் இரட்டை கொலைக்கான காரணம் மற்றும் கொலையில் தொடர்புடைய நபர்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என போலீசார் கருதினர்.
இதற்காக தாத்தா செந்திலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக தாத்தா செந்தில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தார்.
சமீபத்தில் ஜாமீனில் வந்து கோர்ட்டில் ஆஜர் ஆகாத குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முயற்சி மேற்கொண்டார். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் குமரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்த ரவுடிகள் பட்டியலை மாநிலத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
அதன்படி அனைத்து மாவட்ட போலீசாரும் தலைமறைவு குற்றவாளிகளை தேடி வந்தனர். சென்னையிலும் இந்த தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையின் புறநகர் பகுதியில் சில ரவுடிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். இதில் சில ரவுடிகள் சிக்கினர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அவர்களில் ஒருவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட ரவுடியின் பெயர் தாத்தா செந்தில் என்பதும், தேரூர் இரட்டை கொலை வழக்கில் குமரி மாவட்ட போலீசார் அவரை தேடி வந்த விபரமும் தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை போலீசார் இத்தகவலை குமரி மாவட்ட போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் உயர் அதிகாரிகள் மூலம் சென்னையில் பிடிப்பட்ட ரவுடி தாத்தா செந்திலை குமரி மாவட்டம் அழைத்து வர ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
தாத்தா செந்திலிடம் குமரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தும் போது ஆறுமுகம்–யோகீஸ்வரி கொலை வழக்கில் இதுவரை வெளிவராத மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும் என தெரிகிறது.