வீழ்ச்சியை நோக்கி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்…..! -எல்லாளன் (கட்டுரை)!!

Read Time:13 Minute, 8 Second

timthumb (3)வீழ்ச்சியை நோக்கி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்…..!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஒரு நீண்ட வரலாற்று பாரம்பரியம் உள்ளதை எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. யாழ்ப்பாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் வருமா? என்ற கனவுடன் இருந்த தமிழ் மக்களுக்கு முதலில் வளாகம் என்ற பெயருடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற குழந்தை பிரசவம் அடைந்தது.

இந்தக் குழந்தையை குறைமாதத்திலேயே கொல்ல வேண்டுமென்ற நோக்கம் கொண்ட தமிழ்த்தலைவர்கள் வளாகம் வேண்டாம் என்ற கோசத்தினை முன்வைத்து பிரதமர் ஸ்ரீமாவுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி எதிர்த்தனர்.

அன்று தொடக்கம் இன்றுவரை இந்தப்பல்கலைக்கழகம் காலங்காலமாக இருந்த தமிழ்த்தலைவர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் ஆகியவற்றினால் தத்தமது சுயநோக்கம் மற்றும் அரசியல் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது யாவருக்கும் தெரியும்.

புலிகளின் கோட்டையாக யாழ்ப்பாணம் இருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் உத்தியோகப்பற்றற்ற மாவட்டச்செயலகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இருந்து கொண்டது.

விரும்பியோ விரும்பாமலோ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சார்ந்த கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அவர்கள் சொல்லிய பணிகளைச் செய்துகொண்டு அரசாங்கச் சம்பளத்தை பூரணமாக அனுபவித்து வந்து கொண்டனர்.

அன்றையதினம் மாணவர்கள்கூட பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கட்டுப்படாமல் இருந்த தன்மை காணப்பட்டது. 1995 ஆம் ஆண்டிற்குப்பிறகு விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை வன்னிப்பிராந்தியத்திற்கு கொண்டு செல்ல விரும்பியபோது முதற்தடவையாக பல்கலைக்கழக சமூகம் புலிகளுக்கு தங்களுடைய எதிர்ப்பு முகத்தைக்காட்ட முற்பட்டது.

இதன்காரணமாக யாழ்ப்பாணத்தில் ஒரு துணைவேந்தரும், வன்னியில் ஒரு துணைவேந்தருமாக இந்தப் பல்கலைக்கழகம் சின்னாபின்னப்படுத்தப்பட்டது.

காலஞ்சென்ற துணைவேந்தர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்களுடைய கனவாகிய பொறியியல்பீடம் கிளிநொச்சியில் அமைப்பதற்கு அரசாங்கம் எண்ணியிருந்தபோதிலும், விடுதலைப்புலிகளை பிழையாக வழிநடத்திய தமிழ்த்தலைவர்கள் பல்கலைக்கழக சமூகத்தின் உதவியுடன் விடுதலைப்புலிகளினுடைய படைமுகாமாக அதனை மாற்றிக்கொண்டனர்.

பின்பு பொங்குதமிழ் என்ற போர்வையில் பல்கலைக்கழக மாணவர்களை பிழையாக வழிநடத்திய பல்கலைக்கழகச் சமூகம் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மாறாவடுக்களை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் வழக்கம்போல நன்கு ஊதிவிடும் செயற்பாடுகளைச் செய்திருந்தனர்.

அரசியல்ரீதியாக காலத்திற்குக்காலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை தமது தேவைக்காக பயன்படுத்திக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள்? என்ற கேள்வி யாழ்ப்பாணப் புத்திஜீவிகளிடையே எழுந்திருந்தது.

இதற்கு வலுவூட்டுவதுபோல பல்கலைக்கழகத்திற்குள்ளும், பல்கலைக்கழகத்திற்கு வெளியேயும் பல மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

ஆனால் அவர்களைப் பயன்படுத்திய தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும், பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள். இறந்த பல்கலைக்கழக மாணவர்களினுடைய ஆன்மா இவர்களை மன்னிக்குமா?

கடந்தகாலத்தில் நடைபெற்ற எல்லாத்தேர்தல்களிலும் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் அரசியல் கட்சிகள் பலவற்றினால் ஏமாற்றப்பட்டு களமிறக்கப்பட்டனர். இவர்களில் பலர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இன்று ஜனநாயக வழிக்கு திரும்பியிருக்கின்றார்கள்.

2009 ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பின்பு பல்கலைக்கழகத்தில் கல்விசார் ஊழியர்களும், கல்விசாரா ஊழியர்களும் ஒன்றுசேர்ந்து ஒரு அரசியல் நடத்துவதற்கு தலைப்பட்டனர். அதற்கு உந்து சக்தியாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம், பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம்,
பல்கலைக்கழக ஊழியர் சங்கம் எனப் பல்வேறு கோணத்தில் அரசியல் சித்து விளையாட்டுக்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அரங்கேறின.

இதற்கு தகுந்தவாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் காலத்திற்கு காலம் பயன்படுத்தப்பட்டன. பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தர் உள்ளிட்ட பீடாதிபதிகள் யாவரையும் கொண்ட 13 பேர்கள் மூதவை உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களைவிட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட 14 பேர்கள் பேரவை உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இதிலே வேடிக்கை என்னவென்றால் 13 பேர்கள் தாங்கள்தான் பல்கலைக்கழகத்தின் ஆளுங்கட்சியென காலாங்காலமாக கூறிக்கொள்கின்றனர். வெளிவாரி உறு;பபினர்கள் 14 பேர்களும் எதிர்க்கட்சி எனவும் கூறப்படுகின்றது.

கடந்த ஆட்சிக்காலத்தில் யாழ்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைச்சர் ஒருவருடைய பார்வை யாழ் பல்கலைக்கழகத்தின் மீது விழுந்த காரணத்தினால், பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் அவரால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன என்ற விமர்சனம் தமிழ் ஊடகங்கள் ஊடாக எழுப்பப்பட்டிருந்தது.

அது உண்மைதான் ஏனெனில் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட பொறியியல்பீடம் அதனைவிட பல புதிய கற்கை நெறிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டமை, அத்துடன் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் ஒன்றாக கற்கக்கூடிய வாய்ப்பு ஆகியவற்றிற்கு இந்த முன்னாள் அமைச்சர் துணைபோயிருந்தார்.

இதனைவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவில் பல்கலைக்கழக மூதவை மற்றும் பேரவை உறுப்பினர்கள் 27 பேர்களும் வாக்களித்தே துணைவேந்தர் தெரிவாவது வழக்கம். மூதவை உறுப்பினர்கள் யாவரும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம்.

அத்துடன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து விடயங்களிலும் இந்த பேராசிரியர்களின் கைகள் பட்டிருக்கும் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. விரிவுரையாளர்கள் தெரிவிலிருந்து மாணவர்களுடைய பரீட்சைப் பெறுபேறுவரை ஆளுங்கட்சியாகிய மூதவை உறுப்பினர்களுடைய பங்கு அதிகம்.

துணைவேந்தர், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள் யாவரும் நினைத்தது பல்கலைக்கழகத்தில் அரங்கேறும். இதற்கு எந்த அரசியல்வாதிகளும் தலையிட முடியாது. மூதவையின் முடிவே இறுதியானது. பேரவை பெயருக்கு மட்டுமே உரிய அவை.

துணைவேந்தர் நினைத்தவர்கள் விரிவுரையாளர்கள் ஆகலாம், பேராசிரியர்கள் ஆகலாம், துறைத்தலைவர்கள் ஆகலாம், முடிசூடா மன்னர் (ராணி) ஆக துணைவேந்தரும் அவருடைய மந்திரிமார்களாக பீடாதிபதிகளும் சாமரம் வீசுகிறார்கள்.

தற்சமயம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்திற்குள் ஏற்பட்ட அரசியல் கருத்து மோதல் முன்னாள் தலைவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. இதனைவிட விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தினால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படாமலேயே பேரவைக் கூட்டங்கள் பல துணைவேந்தருடைய அழுத்தம் காரணமாக முடிவுக்கு வந்திருக்கின்றன.

இம்முறை காக்கா பிரயாணி போல அமைந்திருக்கின்ற அல்லது தமிழ், முஸ்லிம், சிங்களக் கூட்டமைப்பு போன்ற அல்லது கொழும்பை மையமாகக்கொண்டு இயங்குகின்றவர்களைக் கூடுதலாகக்கொண்ட 14 பேரவை உறுப்பினர்களும் ஏனோதானோ என்ற போக்கில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி போல தொழிற்படாமல் துணைவேந்தர் பக்கம் சாய்ந்து அமைதியாக இருப்பது பல்கலைக்கழகத்தினுடைய வளர்ச்சியை பாதிக்கும்.

இதனைவிட கூடுதலானவர்கள் பேராசிரியர்களாக இருப்பதனால் அவர்களும் ஆளுங்கட்சியாகிய 13 பேர்களுடன் சேர்ந்து எதிர்க்கட்சியை நலிவடையச் செய்திருக்கின்றார்கள்.

பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் தொடர்பாக விசாரிப்பதற்கென அமைக்கப்பட்ட குழுவை துணைவேந்தர் முடக்கியிருப்பது அவருடைய அரசியல் வெற்றியைக் காட்டுகிறது.
தற்சமயம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணைவேந்தருக்கு எதிராக நீண்ட குற்றப்பத்திரிகை பேரவை உறுப்பினர்கள் சிலருடைய அனுசரனையுடன் பல்கலைக்கழன மானியங்கள் ஆணைக்குழுவிற்கும், ஜனாதிபதிக்கும், உயர்கல்வி அமைச்சருக்கும் எதிர்வரும் வாரங்களில் அனுப்பப்பட இருக்கின்றது.

இதன்மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி நீக்கப்பட்டு பிரதம நிறைவேற்று அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகள் தொடரலாம் எனக் கூறப்படுகிறது.

இதன்மூலம் கொழும்பு பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஏற்பட்ட சுத்திகரிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் நடைபெறலாம் என பல்கலைக்கழக வட்டாரங்கள் நம்புகின்றன.

எது எப்படியிருப்பினும் பல்கலைக்கழகத்துக்குள் உள்வீட்டு அரசியல், வெளி அரசியல் ஆகியன இன்றி மாணவர் மையக் கல்வியை முழுமையாக ஊட்டுவதன் மூலம் பல்கலைக்கழக வீழ்ச்சிக்கு அணை போட முடியும்.

இதற்கு அரசியல் செய்யாத துணைவேந்தர் ஒருவர் எதிர்காலத்தில் நியமிக்கப்பட வேண்டும்.

-எல்லாளன்–

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கூடுதல் மாஜிஸ்திரேட் கையும் கரன்சியுமாக பிடிபட்டார்!!
Next post பள்ளிக்கூட பஸ் மீது மரம் விழுந்து விபத்து: 5 மாணவ-மாணவிகள் பலி!!