ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 35 பேர் கைது: நடவடிக்கை தொடரும் என உறுதி!!
ஆக்ராவில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிரடி சோதனையில் ஈடுபட்ட ரெயில்வே போலீசார், பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 நபர்களை கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு பின் சிறுநீர் கழிப்பவர்கள் திருந்துவார்கள் என்று நினைத்த நிலையில் இன்று பொது இடத்தில் சிறுநீர் கழித்த 39 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆக்ரா சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள ரெயில்வே சூப்பிரெண்ட் கோபேஸ்நாத் கண்ணா, “தூய்மையான இந்தியாவை உருவாக்கும் வகையில், ரெயில் நிலைய எல்லைகளில் அசுத்தம் செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும்” என்றார்.
இன்றைய சோதனையில் குடிசைப்பகுதி மக்கள் வசிக்கும் அச்னேரா, கோசி கலன் பகுதியை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு இனிமேல் பொது இடங்களில் சிறுநீர் கழிக்க மாட்டோம் என்று கைதானவர்கள் எழுத்து மூலமாக உத்தரவாதம் தந்தால் தான் விடுவிக்கப்படுவார்கள் என்று கண்ணா கூறியுள்ளார்.