சவூதியில் 1.2 லட்சம் பாக். ‘உம்ரா யாத்ரீகர்கள்’ மாயம்!

Read Time:3 Minute, 41 Second

சவூதிக்கு உம்ரா புனித யாத்திரை சென்ற 1 லட்சத்து 20 ஆயிரம் பாகிஸ்தான் யாத்ரீகர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. உம்ரா என்பது, வருடத்தின் எந்த நாளிலும் முஸ்லீம்கள் மெக்காவுக்கு புனித யாத்திரை மேற்கொள்வதாகும். இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டு மத விவகாரத்துறை செயலாளர் வக்கீல் அகமது கான் கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு உம்ரா புனித யாத்திரை சென்ற யாத்ரீகர்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இன்னும் நாடு திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சவூதி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளோம். இவ்வளவு பேர் காணாமல் போனதற்கு சவூதி நிர்வாகம்தான் பொறுப்பேற் வேண்டும். உம்ரா விசாக்களை இவர்கள் தவறாகப் பயன்படுத்தி சவூதி சென்றார்களா என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து விசாரித்து வருகிறோம். சவூதி நிர்வாகம் அங்கீகரித்த ஏஜென்டுகள் மூலம்தான் விசாக்களை வழங்கி வருகிறது. எனவே இதில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. இத்தனை பேர் காணாமல் போனதற்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பாக முடியாது. சவூதி அரேபியாவில் காணாமல் போன பாகிஸ்தானியர்கள், சவூதி நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட ஏஜென்டுகள் மூலம் உம்ரா விசா பெற்று அங்கு சென்றவர்கள் ஆவர்.

ஹஜ் யாத்திரை குறித்த விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேரடியாக மேற்கொள்கிறது. ஹஜ் யாத்திரை சென்ற அனைத்துப் பாகிஸ்தானியர்களும் நாடு திரும்பி விட்டனர். உம்ரா சென்றவர்களில்தான் இத்தனை பேர் மொத்தமாக காணாமல் போயுள்ளனர் என்றார் அவர்.

காணாமல் போன லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்களில் பெரும்பாலானவர்கள் சவூதியிலேயே தங்கி சிறு சிறு வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்காக உள்ளூர் ஏஜென்டுகளுக்கு அவர்கள் பெரும் பணத்தைக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது உம்ரா விசாவைப் பயன்படுத்தி, சவூதியில் வேலை பார்க்க இவர்கள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் நாட்டவரை சவூதி அரசு கண்டுபிடித்து நாடு கடத்தியுள்ளது. இந்த நிலையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களைக் காணவில்லை என்று அந்த நாட்டு அரசு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கலிபோர்னியா: காட்டுக்கு தீ வைத்த சிறுவன்
Next post விமானத் தாக்குதலில்(?) புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி!!