இராக்கின் மாபெரும் அணை உடைகிறது-ஆபத்தில் 5 லட்சம் உயிர்கள்!!!

Read Time:4 Minute, 17 Second

இராக்கில் உள்ள மிகப் பெரிய அணை ஒன்று உடையும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அணை உடைந்தால் 5 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவப் பொறியாளர்கள் மற்றும் அமெரிக்க அரசின் பிற அதிகாரிகள் இணைந்து மதிப்பிட்டு ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், இராக்கின் மோசூல் பகுதியில் உள்ள அணை உடையக் கூடிய பேராபத்தில் உள்ளது. இந்த அணை உடைந்தால் 5 லட்சம் பேர் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இராக்கின் 2வது பெரிய நகரம்தான் மோசூல். பாக்தாத் நகருக்கு அருகே இந்த நகரம் உள்ளது. மோசூல் அணை உடைந்தால், மோசூர் நகரம் வெள்ளத்தில் மூழ்கி விடும். நகரில் 20 மீட்டர் ஆழத்திற்குத் தண்ணீர் மிதக்கும். அருகில் உள்ள தலைநகர் பாக்தாத்தின் பல பகுதிகளிலும் கூட நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இந்த அணையின் நிர்வாகியான தனூன் அயூப் கூறியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அணையைப் பலப்படுத்தும் பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்றும், அதனால்தான் அணை இந்த ஆபத்தை சந்தித்துள்ளதாகவும் அமெரிக்க பொறியாளர்கள் குழு கூறியுள்ளது.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பது குறித்து அமெரிக்க மற்றும் இராக் அதிகாரிகள் தீவிரமாக விவாதித்துக் கொண்டுள்ளனர். அணை உடையும் ஆபத்தைத் தடுக்க வேண்டுமானால், டைக்ரீஸ் நதியின் குறுக்கே 2வது அணை உடனடியாக கட்டப்பட வேண்டும் என்று அமெரிக்க பொறியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதற்கு அதிக செலவாகும், மேலும் இது தேவையற்றது என்று இராக் அதிகாரிகள் கூறுகின்றனராம்.

கடந்த மே மாதம் அமெரிக்க உயர் அதிகாரிகள் அணை உடைந்தால் ஏற்படும் அபாயம் குறித்து இராக் பிரதமர் நூரி அல் மாலிக்கிக்கு கடிதம் எழுதி எச்சரித்துள்ளனர்.

மோசூல் அணை மோசூல் நகரைக் காப்பாற்றுவது இயலாத காரியம். அணை நிரம்பும் நிலை ஏற்பட்டால், மோசூல் நகரில் 20 மீட்டர் ஆழத்திற்கு மிகப் பெரும் தண்ணீர் வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடும் என அமெரிக்க பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பேராபத்தை சந்தித்துள்ள மோசூல் அணை கடந்த 1980ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணை அமைந்துள்ள இடமே பெரும் சர்ச்சைக்குரியதாகும். அணை அமைந்துள்ள இடம் சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த இடம். தண்ணீர் இங்கு அதிகம் சேர்ந்தால் கரைந்து போய் விடக் கூடியது. இந்த இடத்தில் எப்படி அணையைக் கட்டினார்கள் என்று அமெரிக்க பொறியாளர்கள் வியப்பு வெளியிட்டுள்ளனர்.

அணை உடையும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அணையின் சுவர் பல்லாயிரக்கணக்கான தடுப்புப் பொருட்களைப் போட்டு முட்டுக் கொடுத்து வருகின்றனராம். இருந்தாலும் கூட, விரைவான மாற்று நடவடிக்கையை எடுக்காவிட்டால் அணை உடையும் ஆபத்தை தவிர்க்க முடியாது என்று அமெரிக்க குழு எச்சரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விமானத் தாக்குதலில்(?) புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி!!
Next post அரியவகை பறவைகளை சுட்டது ஏன்?: இங்கிலாந்து இளவரசரிடம் போலீசார் விசாரணை