கார்த்திக், சரத் கூட்டணி உறுதியானது – விரைவில் அறிவிப்பு

Read Time:4 Minute, 27 Second

sarat-and-karthik.gifநடிகர் கார்த்திக்கும், சரத்குமாரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இருவரும் கூட்டணி சேருவது குறித்து முடிவு செய்து விட்டனர். விரைவில் இதுகுறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர். விஜயகாந்த்தைப் பின்பற்றி அரசியலுக்கு வந்தவர் கார்த்திக். ஆனால் விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட எழுச்சியைப் பெற இவர் தவறி விட்டார். பெரும் ரசிகர் கூட்டமும், தொண்டர் கூட்டமும் இருந்தும் கூட அதை ஒன்று திரட்டி, உறுதியான தொண்டர் படையாக மாற்றத் தவறி விட்டார் கார்த்திக். பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவரான பின்னர் கார்த்திக் நடத்திய கூட்டங்கள் எல்லாம் களேபரங்களாகத்தான் முடிந்தன. சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்த கூட்டம், கார்த்திக்கே வராத காரணத்தால் கேன்சல் ஆகிப் போனது. இந்த நிலையில் கார்த்திக்கும், சமீபத்தில் கட்சி ஆரம்பித்த சரத்குமாரும் இணைந்து புதிய கூட்டணி அமைக்கத் தீர்மானித்துள்ளனர். சமீபத்தில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை வந்திருந்த கார்த்திக்கும், சரத்குமாரும் தனியாக சந்தித்தப் பேசினர். அப்போது கூட்டணி குறித்து இருவரும் விவாதித்தனர்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து செயல்படுவது முடிவாகி விட்டதாம். இதை கார்த்திக் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. விரைவில் இதுதொடர்பாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

வரும் தேர்தல்களை பார்வர்டு பிளாக்கும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் சேர்ந்து சந்திக்கவுள்ளன.

இந்த கூட்டணியில் விஜயகாந்த்தும் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. காரணம், விஜயகாந்த்தும், சரத்குமாரும் வித்தியாசமான அணுகுமுறைகள், சிந்தனைகளைக் கொண்டவர்கள். எனவே இரு துருவங்களாக விளங்கும் இவர்கள் இணைவது சத்தியமாக சாத்தியமில்லாதது என்று கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்துவது போல, சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாளுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த விஜயகாந்த்தும், சரத்குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை தவிர்த்து விலகிச் சென்றது இருந்த்து.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வருகிறார். சமீபத்தில் சேலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியிலும் கூட இதை உறுதிப்படுத்தினார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பேன் என்று கூறியிருக்கிறார்.

விஜயகாந்த்தையும், சரத் – கார்த்திக் கூட்டணியில் இணைத்தால் நாயுடு, முக்குலத்தோர் மற்றும் நாடார் சமூகத்தினரின் ஓட்டுக்களை பெற்று விடலாம் என்று ஒரு கணக்கு போடப்படுகிறது.

இவர்கள் மூன்று பேரும் கூட்டணி சேருவது இயலாத காரியம். ஆனால் சேர்ந்தால் தமிழக அரசியலில் பெரியதொரு திருப்புமுனை ஏற்படும் என்று அந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கூறி வருகிறார்கள்.அரசியலில் எதுவும் நடக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கருணாஅம்மான் லண்டனில் கைது
Next post இந்த வார ராசிபலன் (02.11.07 முதல் 08.11.07)