போலி என்கவுன்டர் வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு 3 போலீஸ்காரர்கள் கைது!!
உத்தரபிரதேசத்தில் போலி என்கவுன்டர் வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. உதய்பன் சிங்கின் தம்பி தேவேந்திர பிரதாப் சிங், 1982 ஆம் ஆண்டு போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இந்த என்கவுன்டர் போலியானது என பின்னர் தெரியவந்தது. என்கவுன்டர் நடைபெற்ற 5 ஆண்டுகளுக்கு பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த போலி என்கவுன்டர் வழக்கில் 2 காவல் ஆய்வாளர்கள், 2 துணை ஆய்வாளர்கள் உள்பட 20 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் இவ்வழக்கில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று தேவேந்திர பிரதாப் சிங்கின் குடும்பத்தினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகளை கைது செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மல்கான்சிங், பூல் சந்த், மன்சூர் அஹமது ஆகிய மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். 2 போலீசார் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். ஏனைய போலீஸ்காரரை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட தேவேந்திர பிரதாப் சிங்கின் அண்ணன் உதய்பன் சிங், கடந்த 2002 ஆம் ஆண்டு ஆயூரையி சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.