பாரத கொலை வழக்கில் குற்றங்களை ஏற்றுக்கொள்ள துமிந்த உள்ளிட்ட 12 சந்தேகநபர்கள் மறுப்பு!!!
பாரத லக்ஷமன் கொலை வழக்கில் தாம் நிரபராதிகள் என வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் பிரதிவாதிகள் மீதான குற்றப்பத்திரிகையில் உள்ள 17 குற்றச்சாட்டுக்களும் பகிரங்க நீதிமன்றில் அறிவிக்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் பிரதிவாதிகள் 12 பேரும் தாம் நிரபராதிகள் என அறிவித்தனர்.
பிரதிவாதியான ஜனக்க பிரியந்த கலபொட நீதிமன்றில் ஆஜராகாமையால் அவரது மனைவி நீதிமன்றில் சாட்சி அளித்துள்ளார்.
2011 செப்டெம்பர் மாதத்தில் வெள்ளை வேனில் ஆயுதத்துடன் வந்த சிலர் தனது கணவரை கடத்திச் சென்றதாக அவர் சாட்சி அளித்துள்ளார்.
அது தொடர்பில் கடுவல நீதிமன்றில் வழக்கு ஒன்று விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சாட்சியத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சந்தேகநபராக ஜானக்க இல்லாது வழக்கினை விசாரணை செய்ய தீர்மானித்துள்ளது.