விழுப்புரம் அருகே விஷம் குடித்து தற்கொலை முயற்சி: சாவுக்கு பயந்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்!!
விழுப்புரம் அருகே பணம் பத்து கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருக்கு சாந்தி (25) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாந்தி தனது குழந்தைகளுடன் புதுவை உருளையன் பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.
நேற்று காலை ராஜேஷ் மனைவி– குழந்தைகளை பார்க்க மாமியார் வீட்டுக்கு வந்திருந்தார். மாலையில் புதுவை கடற்கரையை சுற்றிப் பார்க்க மனைவியை அழைத்தார். ஆனால், சாந்தி வர மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த ராஜேஷ் மாமியார் வீட்டில் இருந்து வெளியேறினார்.
பின்னர் மருந்து கடைக்கு சென்று எலி மருந்து மற்றும் கரப்பான் பூச்சி கொல்லி மருந்தை வாங்கினார். கடற்கரை சாலைக்கு வந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து 2 மருந்துகளையும் ஒன்றாக கலந்து சாப்பிட்டார்.
சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி– மயக்கம் ஏற்பட்டது. பிறகு மனம் மாறிய ராஜேஷ், சாவுக்கு பயந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள விறுவிறுவென புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கிருந்த டாக்டர்களிடம் நடந்த விவரங்களை கூறி தனது உயிரை காப்பாற்றும்படி கதறினார். இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் ஆபத்தான நிலையை தாண்டி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் ராஜேஷ் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.