முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் ஐதேக ஆட்சி அமைக்க முடியாது!!
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. எமது கட்சி பெறப்போகும் பத்து ஆசனங்களைக் கொண்டுதான் ஐக்கிய தேசிய கட்சி அரசு பலமடையும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
திருகோணமலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
15 வருடங்களாக நாம் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கப் போராடினோம். ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தடவைகள் நாம் பந்தயம் கட்டிய குதிரை வெல்லவில்லை. ஆனால், இந்த முறை நாம் பந்தயம கட்டிய குதிரை வென்றதோடு அதில் சவாரி செய்யவும் செய்கிறோம்.
மஹிந்தவின் ஆட்சியில் எமக்குப் போதுமான அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இருந்தும், கட்சியைப் பாதுக்காப்பதற்காக அந்த அரசில் இணைந்து இருந்தோம், புலி பதுங்குவது பாய்வதற்கு என்பது போல், ஆட்சி அதிகாரத்தை எமது கையில் எடுப்பதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இப்போது வென்றுவிட்டோம்.
இப்போதுதான் நாம் விரும்பியவாறு எமது பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. எமது கட்சி இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. நாம் பெறப்போகும் பத்து ஆசனங்களால்தான் ஐக்கிய தேசிய கட்சியின் அரசைப் பலப்படுத்தும்.
திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தை எமது கைகளில் எடுப்பதன் மூலம்தான் இந்த மாவட்டத்தைப் பூரணமாக அபிவிருத்தி செய்ய முடியும். அதற்காக நாம் இந்தத் தேர்தலில் பாடுபட வேண்டும்.
இப்போதுதான் முஸ்லிம் காங்கிரசுக்கு வசந்த காலம் பிறந்து இருக்கின்றது. இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்தி நாம் திருமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதோடு எமது துரோகிகளையும் தோற்கடிப்போம் – என்றார்.