அநுர, சுசில் பதவி நீக்கம்! ஐமசுமு பிளவு வெளிச்சத்திற்கு வந்தது!!
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கட்சிப் பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களின் கட்சி உறுப்புரிமையும் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பதில் பொதுச் செயலாளராக பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமக்கு புதிய பதவிகளில் செயற்பட அப்பதவியை வகித்தவர்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடும் என்பதால் அவர்களை செயலிழக்கச் செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு துமிந்த திஸாநாயக்க மற்றும் விஸ்வ வர்ணபால ஆகியோர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதிமன்றம் ஓகஸ்ட் 28ம் திகதிவரை அமுலில் இருக்கும் வகையில் இவர்கள் பதவியில் இருந்து செயற்பட முடியாத அளவு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மனுமாரர்கள் சார்பில் ஜாரக ஜயரத்ன மற்றும் கே.கணகேஸ்வரன், சந்திக ஜயசுந்தர மற்றும் புலஸ்தி ரூபசிங்க ஆகிய சட்டத்தரணிகள் நீதிமன்றில் வாதாடியுள்ளனர்.