கொடிய ஆட்சியாளர்கள் ஆட்சிஅமைக்க இடமளிக்கக்கூடாது!!!! திருமலை இறுதிப் பிரச்சாராக்கூட்டத்தில் வேட்பாளர் சரா.புவனேஸ்வரன்.!!
நாம் பட்ட துயரங்களும், இழப்புகளும் எம்மோடு முடியட்டும். அடுத்துவரும் எமது சந்ததி இந்த நாட்டில் சமஅந்தஸ்தோடு வாழவேண்டும். இனிமேலும் நாம் தவறுவிட்டால் இலங்கையில் தமிழினமே இல்லாதுபோய்விடும். ஆகையால் வரும் பதினேழாம் திகதி நடைபெறும் தேர்தலில் தமிழ்மக்கள் தவறாது வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமது பலத்தை சர்வதேச அரங்கிற்குக் காட்டவேண்டும்.
இவ்வாறு உரையாற்றினார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் கிராமசபைத் தலைவர் நா.சி.சரவணமுத்துவின் (சேமன் சரவணமுத்து) புதல்வரும், விரிவுரையாளரும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், கல்வியலாளருமான சரா.புவனேஸ்வரன்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் எமது இனத்தை தோற்றுப்போன இனமாகச் சித்தரிக்க பலரும் முனைந்த வேளை ஜனாதிபதித் தேர்தலில் நாம் மீண்டெழும் இனம் என்பதனை நிரூபித்தோம். இந்தத்தேர்தல் நாம் ஒருமித்து முனைப்புப் பெற்றுவிட்டோம் என்பதனைக் காட்டுவதோடு கொடிய ஆட்சியாளர்கள் மீண்டும் இந்த நாட்டை ஆழ்வதற்கான சந்தர்ப்பத்தை நிராகரிப்போம். இனிவரும் காலங்களில் எமது மண்ணில் ஓருயிரேனும் பலியிடப்படாத அளவுக்கு நாம் ஒற்றுமையாக ஓரணியில் திரண்டிருக்கவேண்டும்.
தப்பிப் பிழைத்துள்ள தமிழ்தேசியத்தை பாதுகாக்கவே கல்விப்புலம் சார்ந்த பலர் எம்முடன் கைகோர்த்து நிற்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை கணிசமான அளவுக்கு தமிழர் வாக்குப்பதிவு அதிகரிக்கும். தொண்ணூறு வீதமான மக்கள் வாக்களிப்பார்கள். இரண்டு ஆசனங்களைத் தழித்தேசிய கூட்டமைப்பு பெற்றுக் கொள்வது உறுதியாகிவிட்டது. ஆகையால் அனைவரும் ஒருமித்து அணிதிரண்டு, அலையலையாகச் சென்று வாக்களிக்கவேண்டும். என்று உரையாற்றினார்.