By 15 August 2015 0 Comments

15 மாத மத்திய ஆட்சியில் ஒரு பைசா கூட ஊழல் இல்லை: பிரதமர் மோடி உரை!!

d4ffba3d-6d7e-4034-966f-32a4cd830832_S_secvpfநாட்டின் 69–வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவில் விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். எளிமையும், ஒற்றுமையும்தான் இந்தியாவின் பலம். அது ஒருபோதும் மங்காது, காயப்படுத்தபட மாட்டாது.

இந்தியாவில் சாதியவாதம், மதவாதம் போன்றவற்றுக்கு ஒரு போதும் இடம் இல்லை. நாட்டின் வளர்ச்சியின் மூலம் அவற்றை நாம் தோற்கடிப்போம்.

நாட்டின் ஒற்றுமை தோற்கடிக்கப்பட்டால் மக்களின் கனவுகளும் தோற்கடிக்கப்பட்டு விடும். வீரம் மிக்க மக்களை உருவாக்குவதில் பெருமிதம் அடைகிறேன். இந்தியாவின் முன்னேற்றத்துக்கு 125 கோடி இந்தியர்களும் குழுவாக இணைந்து பாடுபட வேண்டும்.

நமது அனைத்து திட்டங்களும் இந்த நாட்டின் ஏழைகளுக்கு பயன்அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு நான் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்று வங்கிகள் ஏழைகளுக்காக இயக்குகின்றன.

ஏழைகளுக்காக திறக்காத வங்கிகளை திறக்க வைத்துள்ளோம். அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் புதிதாக 17 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏழைகளின் புதிய வங்கி கணக்குகளில் ரூ.20 ஆயிரம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

நமது அனைத்து திட்டங்களும், நிறுவனங்களும் ஏழைகளுக்கு உதவும் வகையில் உள்ளன. அவர்களை பொருளாதார ரீதியில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும்.

நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்தியின் 150–வது பிறந்த நாளென்று தூய்மை இந்தியாவை சமர்பிப்போம். தூய்மை இந்தியா திட்டத்தை புரிந்து கொண்டுள்ள மக்களை வாழ்த்துகிறேன்.

நாடு முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் 2.62 லட்சம் பள்ளிகளில் 4.25 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இது நமக்கு தேவையானவற்றை நம்மால் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொடுத்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை கட்டும் நமது கனவு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.

‘டீம்’ இந்தியா நினைத்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். டீம் இந்தியா குழுவின் உழைப்பால் இது சாத்தியமானது.

உழைக்கும் வர்க்கத்தினரை கவுரப்படுத்துவது நமது நாட்டின் கடமையாகும். இது நமக்குள்ள இயற்கையான தன்மையாகும். உழைப்பாளர்களுக்காக உழைப்பே வெல்லும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அவர்கள் வேலை மாறி வேறு மாநிலம் சென்றாலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்க இது உதவும்.

நாட்டின் ஏழை–பணக்காரன் என்ற பாகுபாட்டை மாற்றுவதுதான் நமது அடுத்தபடியாக இருக்க வேண்டும்.

சட்டங்கள் இயற்றிக் கொண்டு இருப்பது மட்டுமே நல்லாட்சிக்கு அடையாளமாக இருக்க முடியாது.

நாடு முழுவதும் ஊழல் என்பது நோய் போல் பரவியுள்ளது. ஊழலை ஒழிப்பதற்கான முயற்சி மேல்மட்டங்களில் இருந்து தொடங்கி பொதுமக்கள் வரை பரவ வேண்டும்.

தேசிய கொடியேற்றி வைத்து சொல்கிறேன். இந்திய தேசிய கொடியை சாட்சியாக வைத்து சொல்கிறேன். கடந்த 15 மாத ஆட்சியில் ஒரு ஊழல் கூட நடைபெறவில்லை. ஒரு பைசா கூட மக்களின் பணம் ஊழலில் வீணாகவில்லை என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்தின் மூலம் ஒதுக்கப்படுகின்றன. இதனால் நமக்கு கூடுதலாக ரூ.3 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இந்தியர்கள் என்றுமே வெளிப்படைத்தன்மை கொண்டவர்கள் நாட்டில் சிலர் எதிர்மறையான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.

எல்.பி.ஜி. மானியத்தை குறைத்து விட்டோம், ரத்து செய்து விட்டோம் என்று சொன்னார்கள். ரூ.15 ஆயிரம் கோடி மானியம் தகுதி அற்றவர்களுக்கு சென்று கொண்டு இருந்தது. தற்போது விமர்சனங்களை மீறி ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு எல்.பி.ஜி. மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதன் மூலம் ஏழைகளின் பணம் மிச்சமாகியுள்ளது.

வசதி படைத்தவர்கள் கேஸ் மானியத்தை திருப்பி தருமாறு நான் கேட்டுக்கொண்டேன். இதுவரை 20 லட்சம் இந்தியர்கள் சிலிண்டர்கள் வேண்டாம் என்று விட்டுக்கொடுத்துள்ளார்கள். இந்த 20 லட்சம் சிலிண்டர்கள் ஏழைகளை சென்றடையும்.

ஜி 20 மாநாட்டில் கருப்பு பணத்தை மீட்க சர்வதேச நாடுகளின் உதவியை நாடினேன். கறுப்பு பணத்தை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசு பொறுப்பேற்றதும் கறுப்பு பணத்தை மீட்பதற்கு குழு அமைக்கப்பட்டது. கறுப்பு பணம் சட்டம் கடினமாக உள்ளதாக சிலர் கவலைப்படுகிறார்கள். இந்த சட்டம் வெளிநாடுகளில் கறுப்பு பணம் வைத்திருக்கும் யாரையும் விட்டு வைக்காது.

ஊழல் ஒரு அமைப்பாக மாறி வருகிறது. காண்டிராக்டர்கள்தான் நாட்டை வழி நடத்தும் நிலை உள்ளது. அதை நாம் சரி செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்காக புதிய காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் வேளாண்மைத்துறை அமைச்சகம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இனி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் என செயல்படும்.

நாட்டின் சிறுவர், சிறுமிகளுக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.6,000 கோடி செலவிடப்படும்.

முன்னாள் படை வீரர்களின் கோரிக்கையான ‘ஒரு பதவி ஒரு பென்சன்’ திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது நீண்ட காலமாக உள்ள பிரச்சனை தற்போது இது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இதுபற்றிய நல்ல செய்தி வெளியாகும்.

சிறிய வேலைகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்துவது விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். இதுபோன்ற நேர்முகத் தேர்வுகளில்தான் ஊழல் இடம்பெறுகிறது.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத தலைவர்கள், ஊடக நண்பர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு வரும் செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு விவசாயியும் நாட்டுக்கு போர் வீரனைப்போன்று முக்கியமானவர்கள்.

நாட்டில் 18,500 கிராமங்களில் இன்னும் மின்சார வசதி இல்லை. அந்த கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி தருவது நமது கடமை.

நாடு முழுவதும் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும். தண்ணீரையும், மின்சாரத்தையும் சேமிக்க வேண்டும். ரூ.50,000 கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் எரிவாயுகுழாய் அமைத்து வருகிறோம். ரெயில்வேயின் சேவையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட செய்ய வேண்டும்.

உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை பலமிக்கதாக உருவாக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடையாமல் நாடு முன்னேற்றம் அடையாது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.Post a Comment

Protected by WP Anti Spam