விசாரணைகள் முடியும் வரை தகவல்களை வௌிப்படுத்த முடியாது!!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நிறைவடையும் வரை, அதன் தகவல்களை முழுமையாக வௌிப்படுத்த முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தகவல்கள் வௌியிடப்படின் சாட்சிகள் பாதிக்கப்படலாம் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமான விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை நீதிமன்றத்தின் முன் நிரூபிப்பது அவசியம் என சுட்டிக்காட்டிய அவர், அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எதனையும் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பான தகவல்களை வௌியிடுமாறு அண்மையில் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதுஎவ்வாறு இருப்பினும் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் வெற்றிகரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.