தேசியப் பட்டியல் விவகாரம் – கூட்டமைப்புக்குள் முரண்பாடா?

Read Time:6 Minute, 52 Second

1971045723Untitled-1தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவு என்பது கூட்டமைப்பின் முடிவல்ல என்றும், அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்ததையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரான (ஈ.பி.ஆர்.எல்.எப்) அவருக்கு தேசிய பட்டியலில் இடமளிக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் மற்ற கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அந்தக் கோரிக்கை தொடர்பில் சரியான முடிவு எடுக்காமல் தமிழரசுக்கட்சி தனது விருப்பத்திற்கு இரண்டு பேரை தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமித்திருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.

இந்த கோரிக்கை தொடர்பில் திருகோணமலையில் இரண்டு முக்கிய பேச்சுவார்ததைகள் நடைபெற்றிருந்த போதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேசியப் பட்டியலுக்கு தமிழரசு கட்சியில் இருக்கும் சில நபர்கள் தமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களை நியமித்திருப்பது, கூட்டமைப்பில் இருக்கும் தமிழரசு கட்சி தவிர்த்த மற்ற கட்சிகளுக்கு ஏற்புடைய செயலல்ல. எல்லோரும் சேர்ந்து விதை விதைப்பதும், அறுவடை செய்யும்போது தமிழரசு கட்சி மட்டும் செய்துகொண்டு போவது என்பதும் ஆரோக்கியமான அரசியலுக்கும் நல்லதல்ல; ஒரு கூட்டமைப்பு தத்துவங்களுக்கும் நல்லதல்ல, ஆனால் இதனை மிகவும் வெட்கம் கெட்டத்தனமாக தமிழரசு கட்சி தொடர்ந்து செய்கிறது என்பதுதான் ஒரு விடயம்” என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அதேசமயம், இந்த பிரச்சினை குறித்து தமது கட்சி இரண்டொரு தினங்களில் விரிவானதொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இதுகுறித்த விரிவானதொரு நேர்காணலை வழங்குவதற்குத் தற்போது தான் தயாரில்லை என்றும், சுருக்கமானதொரு கருத்தை மட்டுமே இப்போது தன்னால் தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களையும் சர்ச்சைகளையும் அதன் தலைவர் இரா.சம்பந்தன் புறந்தள்ளியுள்ளார்.

மிகவும் ஆழமாக சிந்தித்து விவாதித்த பிறகே கூட்டமைப்பின் சார்பில் துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது என சம்பந்தன் பிபிசியிடம் தெரிவித்தார்.

சில கொள்கைகளின் அடிப்படையிலேயே அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு ஒவ்வொரு இடங்கள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது, கூட்டமைப்பின் சார்பில் பெண் ஒருவர பாராளுமன்றம் செல்ல வேண்டும் எனறும் முடிவு செய்யப்பட்டது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே சாந்தி தோல்வியடைந்திருந்தார் என்பதும், யாழ் தேர்தல் மாவட்டத்தைக் காட்டிலும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்த அளவுக்கே கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர் என்பதும் அவரது தேர்வுக்கு ஒரு காரணம்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களிலேயே மிகக் குறைவான உறுப்பினர்கள் தேர்வானாதால் அப்பகுதிக்கு ஒரு இடம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது என சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்துக்கான இடத்தை முடிவு செய்யும்போது யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏற்கனவே ஐந்து உறுப்பினர்கள் அங்கு தேர்வாகியுள்ள நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆறாவது இடத்தை தவற விட்டவரை புறந்தள்ளி அவருக்கும் குறைவான வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு இடமளிப்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன என்கிறார் கூட்டமைப்பின் தலைவர்.

தேசியப் பட்டியல் நியமனங்கள் குறித்து கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவை விமர்சித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!
Next post அனுர, சுசிலுக்கு எதிரான தடையுத்தரவை இரத்துச் செய்ய கோரிக்கை!!