`தி.மு.க., என் வீடு; டி.ராஜேந்தர் விருந்தாளி’நெப்போலியன் புது விளக்கம்

Read Time:7 Minute, 25 Second

indneppoliyan-tr.jpgதி.மு.க.,வில் டி.ராஜேந்தருக்கு மட்டும் பதவி கொடுத்ததால் அதிருப்தியில் இருக்கிறார் நடிகர் நெப்போலியன் என்ற பேச்சு பரவலாக இருந்தது. ரசிகர்களை திரட்டி புதிய கட்சி துவங்கப் போவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், நெப்போலியன் அளித்த பேட்டி:.. உங்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்கு காரணம் என்ன?
வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., ஆவதற்கு முன்னால வருஷத்துக்கு ஏழெட்டு படங்கள் பண்ணிட்டிருந்தேன். கட்சின்னு வந்த பிறகு என்னை நடிக்க வைக்க பலர் பயந்ததால் வாய்ப்புகள் குறைந்தது. மயிலாப்பூர் தேர்தலில் நான் தோற்ற பிறகு சற்று இடைவெளி கிடைத்தது. `தசாவதாரம், ஆயுதம் செய்வோம்’ படங்களில் நடிச்சிட்டிருக்கேன். என் அரசியல் குரு கருணாநிதிக்கும், என் சினிமா குரு பாரதிராஜாவுக்கும் செலுத்தும் மரியாதையாக நினைத்து கலைஞர் `டிவி’க்காக பாரதிராஜா இயக்கத்தில், `தெற்கத்தி பொண்ணு’ சீரியலிலும் நடிக்கிறேன்.
ஆசியாவிலேயே பெரிய தொகுதியான வில்லிவாக்கம் தொகுதியில ஜெயித்த உங்களுக்கு, மயிலாப்பூரில் ஜெயிக்க முடியாமல் போனதற்கு கட்சிக்காரர்கள் தான் காரணமா?
மயிலாப்பூரில் தோற்றதற்கு கட்சிக் காரர்களை குறை சொல்ல முடியாது. எதிரியை ஈசியாக எடை போட்டு `பீல்டு ஒர்க்’ சரியா செய்யாம இருந்துட்டோம். அதற்கு சரியான பாடம் இந்த தேர்தல். `எஸ்.வி.சேகர், காமெடி நடிகர் அவருக்கு எப்படி ஓட்டுப் போடுவாங்க, காஞ்சி ஜெயேந்திரர் பிரச்னையில் அ.தி.மு.க., மீது பிராமணர்கள் அதிருப்தியில் இருக்காங்க. நாம ஈசியா ஜெயிச்சுடலாம்’ என்று சொன்னதால நான் தேர்தல் பிரசாரம் செய்ய மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் போயிட்டேன். என் தொகுதியில் முறையாக பிரசாரம் செய்ய தவறியதால் தோற்கும் நிலை ஏற்பட்டது. சிறுபிள்ளையிலிருந்து நான் எதிலும் தோற்றது கிடையாது. இந்தத் தோல்வி சங்கடமாக இருந்தது.

டி.ராஜேந்தருக்கு பதவி கொடுத்த கருணாநிதி உங்களுக்கு கொடுக்கவில்லை என்று உங்கள் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்களாமே?

தோழமை கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும், வெளியிலிருந்தாலும் கட்சிக்கு பாடுபட்டவர்களுக்கும் பதவி கொடுத்து கவுரவிக்க கருணாநிதி நினைக்கிறார். நம்ம வீட்டிற்கு ஒரு விருந்தாளி திடீர்ன்னு வந்துட்டா நமக்கு சாதம் இருக்கோ இல்லையோ வந்தவருக்கு போட்டு உபசரிப்போம்ல. அதைத் தான் கருணாநிதி செய்திருக்கிறார். தி.மு.க.,வை என் வீடு மாதிரி நினைக்கிறேன். யாருக்கு எப்ப எதை செய்யணும்ன்னு கருணாநிதிக்கு தெரியும். எனக்கு என்ன செய்யணுமோ அதை நிச்சயம் செய்வார். ரசிகர்கள் என் மீது வைத்த பாசத்தில் குமுறுகின்றனர். அவர்களை நான் சமாதானப்படுத்தி விட்டேன். பதவி கொடுத்தால் தான் கட்சியிலிருக்கணும் என்பதில்லை. முதல்வர் என் மீது காட்டும் அன்பையும் பரிவையுமே பெரிதாக நினைக்கிறேன்.

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள், உங்கள் ரசிகர் மன்றத்தை சென்னையில் கூட்டி புதிய கட்சியை அறிவிக்கப் போவதாக பரபரப்பாக பேசப்படுகிறதே?

எனக்கு ரசிகர் மன்றம் துவங்கி 15 ஆண்டுகள் ஆயிருச்சு. அதுக்காக விழா எடுக்கணும்ன்னு சொன்னாங்க. எனது பிறந்த நாளான டிசம்பர் இரண்டாம் தேதி நடத்தணும்ன்னும் ரசிகர்கள் விரும்புனாங்க. இதுக்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கிலும், மைதானத்திலும் டிசம்பர் இரண்டாம் தேதி ரசிகர் மன்ற சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது. மாநிலம் முழுவதிலிருந்தும் ரசிகர்கள் சென்னை வர இருந்தனர். இதற்குள் நான் தனிக்கட்சி துவங்கப் போறேன்; அதுக்கு அறிவிப்பு வெளியிடத் தான் ரசிகர் மன்றத்தை கூட்டியிருக்கேன்னு பேச்சு பரவிடுச்சு. பேச்சு வந்த பிறகு இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று ரத்து செய்துட்டேன்.

சரத்குமார் அரசியல் கட்சி துவங்கிய பிறகும் நடிகர் சங்கத்தில் தலைவராக நீடிப்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அரசியல் கட்சியில் இருப் பவர்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினரா இருக்கலாம். தலைவரா இருப்பது யோசிக்க வேண்டியது விஷயம் தான். விஜயகாந்த் தலைவரா இருந்தப்போ அரசியல் கட்சி துவங்கியதும் தலைவர் பதவிக்கு போட்டியிடலை. சரத்குமார் தலைவர் ஆனார். கட்சித் தலைவராக இருப்பவர் சங்கப் பதவியில் இருக்க வேணாம்ன்னு புகைச்சல் ஏற்பட்டதால் ராஜினாமா செய்தார். சங்கத்திற்கு தகுதியான தலைமை ஏற்க வேறு ஆள் இல்லை.

சரத்குமாரே தொடர்ந்து தலைவராக இருக்கணும்ன்னு முடிவு செய்து அவரே தலைவராக தொடர்கிறார். ஆனால், சங்கம் முன்பை போல சுறுசுறுப்பாக இல்லை என்றும் பேசப்படுகிறது. கட்சித் தலைவரா இருந்து பல லட்சம் மக்களுக்கு பாடுபட வேண்டியவர், மூவாயிரம் பேர் உறுப்பினரா உள்ள நடிகர் சங்கப் பதவியையும் விடமாட்டேன்ன்னு பிடிச்சுக்கிட்டிருப்பது எனக்கு சரியாக படலை. சங்கம் சரியாக செயல்படா விட்டால் வரும் தேர்தலில் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவேன்.இவ்வாறு நெப்போலியன் பதிலளித்தார்.

indneppoliyan-tr.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்கள்……
Next post கருணா தரப்பு உறுப்பினர் சயனைட் உட்கொண்டு மரணம்!!