இலங்கை ஆயுதபடைகளின் தளபதி யாழ்குடா விஜயம்

Read Time:4 Minute, 48 Second

யாழ் குடாநாட்டுக்கான ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரஸ்ரீ இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்கிறார். இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, முகமாலை இராணுவ முன்னரங்க பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் மோதல்களின் பின்னர் அப்பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக களத்தில் உள்ள இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை காலை பலாலி விமானப்படைத் தளத்தைச் சென்றடைந்த இராணுவ தளபதியை யாழ் குடாநாட்டுக்கான ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரஸ்ரீ வரவேற்று யாழ் குடாநாட்டின் பொதுவான பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. முகமாலை – கிளாலி இராணுவ முன்னரங்க பகுதிகளில் கடைசியாக இடம்பெற்ற விடுதலைப் புலிகளுடனான கடுமையான மோதல்களில் இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரச துருப்புக்களின் நலன்களைக் கவனிப்பதற்காகவும், யாழ் குடாநாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்குமாகவே இராணுவ தளபதி யாழ்ப்பாணத்திற்கான இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விமானப்படையின் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட 3 தினங்களின் பின்னர், வடபகுதிக்கான விஜயத்தை இராணுவ தளபதி மேற்கொண்டிருந்தார் என்றும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் வடமத்திய மாகாணத்தின் அனுராபரம் மாவட்டத்தில் பதவிய கம்பிளிவௌ என்னுமிடத்தில் விடுதலைப் புலிகள் இன்று காலை நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 2 ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. காவல் கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஊர்காவல் படையினர் மீதே இந்த கண்ணிவெடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, அப்பிரதேசத்தைச் சுற்றிவளைத்து படையினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கின்றனர். ஆயினும் யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

மன்னார் மாவட்டம் தம்பனை, நாவற்குளம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் இராணுவ முன்னரங்க பகுதிகளில் விடுதலைப் புலிகள் இராணுவத்தின் பாதுகாப்பு வேலியை ஊடறுத்து உட்புகுவதற்கு முற்பட்டபோது, அவர்களுக்கு எதிராகப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. இந்த மோதல்களின்போது 5 இராணுவத்தினர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாட்டுக் கட்டும் விசாலி
Next post யுஎஸ் ‘ஷாப்பிங் மால்களை’ தாக்க அல்-கொய்தா திட்டம்