By 11 November 2007

உடலில் நாகதேவி இறங்கிவிட்டதாக உயிருடன் இளம்பெண் சமாதி

உடலில் நாகதேவி இறங்கியிருப்பதாக நம்பி, கிராமத்தவர் முன்னிலையில் உயிருடன் சமாதி இறங்கிய இளம் பெண் பரிதாபமாக இறந்தார். இமாசலப்பிரதேச மாநிலம் கனாலே கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்சந்த். இவரது மகள் சோனாலி (18). பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர். தந்தைக்கு உதவியாக விவசாய வேலைகளை கவனித்து வந்தார். திடீர் என ஒருநாள் இவருக்கு அருள் வந்தது. நாகதேவதை தன் மீது இறங்கியிருப்பதாக அவர் கூறினார். அனைவரும் தன்னை வணங்கினால் மோட்சம் பெறலாம் என்று கூறியவர், தன்னை உயிருடன் சமாதியாக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இந்த தகவல் கிராமத்தில் பரவியது. அனைவரும் பயந்து நடுங்கினர். இளம்பெண்ணை நாகதேவியாக நினைத்து வழிபடத் துவங்கிவிட்டனர்.வீட்டருகே கண்டிப்பாக உயிருடன் சமாதி வைக்க வேண்டும்; மறுத்தால் தான் காற்றாய் மறைந்து விடுவதாகக் கூறினார். கிராம மக்கள் பயந்தனர். பெண்ணை உயிருடன் சமாதி வைக்க ஏற்பாடுகள் நடந்தது. இந்த விஷயம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெண்ணை சமாதிக்குள் வைக்கும் போது காற்றுப்போகும் வகையில் சிறிய துவாரத்தைப் போடுங்கள் என போலீசார் அறிவுரை கூறி, சமாதி நிகழ்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.

கிராம மக்கள் திரண்டு பெண்ணை சமாதி வைக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். வீட்டருகே பெரிய குழி வெட்டப் பட்டது. அதில் உயிருடன் இறங்கினார் இளம்பெண். பின்னர் குழி மூடப்பட்டது. காற்றுப்புகாதவாறு அதை மூடிவிட்டனர். சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி அந்தப் பெண் இறந்தார். இந்த சம்பவத்தால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரிடம் இதுபற்றி கேட்டதற்கு, “குழிக்குள் காற்றுப் போகும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோமே’ என்று கூறினர். பெண்ணை உயிருடன் சமாதியாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேறு வழியின்றி இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Comments are closed.