கலப்பு மற்றும் உள்நாட்டு பொறிமுறை இரண்டிலும் விசாரணை நடத்த வேண்டும்!!

Read Time:7 Minute, 36 Second

1425604231tulfயுத்தக் குற்றங்கள் கலப்பு நீதிமன்றத்தாலும் உள்ளக பொறிமுறை மூலமும் பகுதி பகுதியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா விசாரணை தொடர்பில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நம்மவர்களும் புலம்பெயர்ந்த மக்களும் மிக முக்கியமாக கருதவேண்டிய விடயத்தை துரதிஸ்டவசமாக அனைவரும் மிகச்சாதாரணமாக எடைபோடுகின்றனர். மனித உரிமைப் பேரவையின் சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற விசாரணை முறையும் அமெரிக்கா முன்மொழிகின்ற உள்ளக விசாரணை முறையும் பற்றித்தான் இங்கே குறிப்பிடுகின்றேன்.

இதனுடைய கடும் விளைவுகளைப்பற்றி உணராமல் பல கோணத்தில் இருந்து பலரால் பலவிதமான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சிலர் தாம்தான் இதை பூரணமாக அறிந்தவர்கள் போலக் கூறுவதும், மற்றும் சிலர் குறிப்பிட்ட குழுவினருக்குத்தான் இதைப்பற்றிய பூரண அதிகாரம் உண்டு எனப் பேசுவதும் வேடிக்கையாகத் தெரிகின்றது. பலரும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு பல்வேறு விதமானக் கருத்துக்களைக் கூறுவதால் எல்லோரும் ஒன்று கூடி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரையில் சர்வதேச கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்றுக்கொண்டாலும், இந்த நீதிமன்றங்கள் எத்தகைய போர்க் குற்றங்களை விசாரிக்கப் போகின்றது என்பதை ஆராயும் போது, பாதிக்கப்பட்டவர்களின் நன்மையை கவனத்தில் எடுத்துப் பார்த்து, சில குற்றச் செயல்களை சர்வதேச கலப்பு நீதிமன்றத்தில் விசாரிப்பது வசதிப்படாது என்றும் அதேபோல் எல்லாக் குற்றங்களையும் உள்ளக நீதிமன்றத்தில் விசாரிப்பது கஸ்டம் எனவும் உணரக் கூடியதாக இருக்கின்றது.

ஆகவே பிரச்சினையற்ற சில விசாரணைகளை தவிர்ந்த ஏனையவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எந்த நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் என்பதை ஓர் விசேட அமைப்பு மூலம் அந்தந்த நீதிமன்றத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்பதே, மேலானது என தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகின்றது.

இந்த நிலைப்பாட்டை எடுக்க எனக்கு போதிய நியாயங்கள் இருந்தபோதும், என் இஸ்டப்படி நான் ஒரு தீர்வை அறிவிக்காது, இப்பிரச்சினைகளில் அக்கறை கொண்டவர்களுடனும் கலந்து ஏகமனதாக முடிவெடுப்பதே சிறந்ததென எண்ணுகின்றேன். ஒருவர் முடிவெடுக்க ஏனையோர் அவரின் பின்னே செல்லும் வழக்கம் மாறவேண்டும். அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவையே வற்புறுத்தவேண்டும்.

தமிழ்த் தலைமைகள் நம் இனத்தின் நன்மை கருதியாவது ஒன்று கூடி ஒரு தீர்வை எடுக்காதமை வெட்கப்படவேண்டிய விடயமாகும். ஏனைய சமூகங்களை பார்த்தாவது தாம் பழகிக்கொள்ளவேண்டும். தாம்தான் மிகச் சிறந்த புத்திசாலிகள் என எவரும் எண்ணக் கூடாது.

மிக மோசமான குற்றங்களும், அடிப்படை உரிமை மீறல்களையும் மூன்று நான்கு வகையாகப் பிரிக்கலாம் அவையாவன வன்புணர்வோடு கூடிய சித்திரவதை, வன்புணர்வு, சித்திரவதையோடு கூடிய கொலை, சித்திரவதையோடு கூடிய கொலை மற்றும் காணாமல் போனதுடனான சித்திரவதையோடு சேர்ந்த கொலை ஆகியவையாகும். இதை இராணுவம் காவல்துறையினர் சம்மந்தப்பட்டவை என மேலும் பிரிக்கலாம். வன்புணர்வோடு கூடிய சித்திரவதைகளுக்குள்ளான எமது பெண்களை நீதிமன்றம் வந்து பகிரங்கமாக சாடசியமளிக்க வைப்பது கஸ்டம் மட்டுமல்ல ஒரு முடியாத காரியமும்கூட என்பதை அனைவரும் அறிவர்.

அனேகமாக வன்புணர்வுகள் சித்தரவதையுடன் சேர்ந்தவையாக இருப்பதால் இதனை அனுபவமிக்க பெண் நீதிபதிகள், பெண் சட்டத்தரணிகள் ஆகியோரைக் கொண்டு சிறு குழுக்களை அமைத்து வேறு எவரையும் அனுமதிக்காது இரகசிய விசாரணைகளை மேற் கொண்டு பொருத்தமான தீர்வையும் நட்டஈட்டையும் வழங்கவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகின்றது.

சித்திரவதையால் ஏற்பட்ட கொலைகளை கலப்பு நீதிமன்றங்களே விசாரிக்க வேண்டும்.சித்திரவதைகள் மட்டும் உள்ளவற்றை உள்ளக விசாரனை முறைமையில் விசாரிக்கலாம். மரண தண்டனை தீர்வாக வரவேண்டிய குற்றங்களை கலப்பு நீதிமன்றம் மூலமே விசாரிக்கப்பட வேண்டும்.

கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாத நிலை ஏற்பட்டால், பாதிக்கப் பட்டவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் சட்ட வல்லுனர்களை உள்ளடக்கிய சிறு குழுக்களை பார்வையாளர்களாக அமர்த்தலாம். மேலும் சில விசாரணைகளுக்குரிய வழக்குகளுக்கு போதிய சட்டங்கள் இல்லாத பட்சத்தில், எமது சட்டங்களுக்கு வேண்டிய வலுவூட்டக் கூடிய புதிய சட்டங்களை உருவாக்கலாம்.

ஒவ்வொரு வருக்கும் உரிய நட்ட ஈடு சிபாரிசு செய்யப்பட வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு அவர்களின் இருப்பிடம் தெரியாத பட்சத்தில் அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் அங்கவீனர்களாக இருந்தாலோ, அல்லது கடும் நோய்வாய்ப் பட்டிருந்தாலோ, அல்லது அவ்வாறு முறைப்பாடு செய்திருந்தாலோ அவர்களுக்கு சகலவிதத்திலும் உதவுவதோடு, அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சாதனங்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி நாளை மறுநாள் அமெரிக்கா செல்கிறார்!!
Next post சுயாதீன ஆணைக்குழு அமைக்கும் நடவடிக்கை இவ்வாரம் ஆரம்பம்!!