விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளை தடை செய்ய வேண்டும்; தமிழக அரசை வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தீர்மானம்!!

Read Time:6 Minute, 48 Second

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசியல் கட்சிகள், அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் சென்னையில் பழ.நெடுமாறன் தலைமையில் நேற்று ஊர்வலம் நடத்த தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் குழு அழைப்பு விடுத்தது. இதில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கலந்து கொள்வதாக அறிவித்தன. எனினும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கவில்லை. தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்று மாலை 4.30 மணிக்கு நடந்தது. சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 23 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். விஷ்ணு பிரசாத் உட்பட 12 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. சில எம்.எல்.ஏக்கள் வர இயலாததற்கு காரணம் கூறியுள்ளனர் என்று சுதர்சனம் தெரிவித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய வன்முறை தாக்குதல், சட்டத்தின் ஆட்சியின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை குறைத்து விடும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்களுக்கு தக்க பாதுகாப்பு கொடுப்பது மாநில அரசின் கடமை. அதைக் கேட்டுத்தான் பெற வேண்டும் என்று அரசு எதிர்பார்க்காமல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.

கிருஷ்ணசாமிக்கு பாதுகாப்பு கொடுக்காமல் கவனக் குறைவாக இருந்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சில அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இரங்கல் கூட்டங்கள் என்ற போர்வையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கூட்டங்கள், ஆர்ப் பாட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி வருவது குறித்து காங்கிரஸ் மிகவும்
கவலை கொண்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக நடத்தப்படும் நடவடிக்கைகளுக்கு தமிழக போலீஸ் அனுமதி தருவது, காங்கிரஸ் கட்சியை வியப்படைய செய்துள்ளது. வன்முறையில் நம்பிக்கை கொண்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான எவ்வித நடவடிக்கையும், அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தின் வாயில்களை வன்முறைக்கு திறந்துவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இத்தகைய நடவடிக்கைகள் குறித்த மெத்தனப் போக்கால், விழிப்புடன் இருக்கும் போலீசைக்கூட திகைக்க வைத்து செயலிழக்க வைத்துவிடும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அமிர்தலிங்கம், பத்மநாபா, சிறீசபாரத்தினம், கதிர்காமா போன்றவர்களை கொன்று குவித்தவர்களை தமிழின் பெயரால் மன்னிக்க இயலாது. ராஜிவ் காந்தியை தமிழ் மண்ணில் கொன்று சாய்த்து மாபாவத்தை செய்த விடுதலைப் புலிகளை காங்கிரஸ் கட்சி மன்னிக்காது; மறக்காது. விடுதலைப் புலிகள் விஷயத்தில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவில்லை என்றால் அதன் விளைவுகளுக்கு தமிழகம் வருந்த வேண்டியது இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அரசியல் அமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துள்ள தமிழக முதல்வர், முன்னாள் பிரதமரை படுகொலை செய்த தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலி, இரங்கற்பா ஆகியவை எங்கள் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து இயக்கங்கள் நடத்தும் அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து அமைப்புகள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அவற்றை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரை ஆயுதம் தாங்கிய கூலிப்படை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு கொலை செய்ய முயற்சித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்களையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post “குடும்பக் கட்டுப்பாடு” செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க…: ஆண்கள் நினைப்பு இது தான்