19ந் தேதிமுதல் பறக்கும் ரெயில்

Read Time:3 Minute, 52 Second

மயிலாப்பூர்வேளச்சேரி இடையே ரூ. 750 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்தை முதலமைச்சர் கருணாநிதி 19ந் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக, சென்னை கடற்கரை பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் விடதிட்டமிடப்பட்டது. அதன்படி மயிலாப்பூர் வரை இருவழிப்பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மயிலாப்பூரில் இருந்து திருவான்மியூர் வரையிலான ஒரு வழிப்பாதையில் குறைந்த அளவிலான ரெயில்களே தற்போது இயக்கப்படுகிறது. பறக்கும் ரெயில் சேவையை வேளச்சேரி வரை நீட்டிப்பதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தன. மேலும் மயிலாப்பூர் திருவான்மியூர் இடையே இருவழிப்பாதையாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வந்தது. மயிலாப்பூர் வேளச்சேரி பறக்கும் ரெயில்பாதை திட்டத்திற்காக ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருவான்மியூர் வேளச்சேரி இடையே சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கும் பணி ஜூன் மாதத்தில் முடிக்கப்பட்டது. ஜூலை மாதம் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் 2 முறை இந்த ரெயில் பாதையை ஆய்வு செய்து, வேளச்சேரி வரை பறக்கும் ரெயிலை இயக்கலாம் என்று அறிவித்தனர்.

ஆனால் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி கொடுத்து 4 மாதங்களாகியும், திருவான்மியூர் வேளச்சேரி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்காமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இந்த பாதையில் ரெயில் சேவை அமலுக்கு வந்தால் கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 35 நிமிடத்திலே சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மயிலாப்பூர் வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் போக்குவரத்தை முதலமைச்சர் கருணாநிதி 19ந் தேதி தொடங்கி வைப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

மயிலாப்பூர் வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் போக்குவரத்தை 19ந் தேதி முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். தொடக்க விழா வேளச்சேரி ரெயில் நிலையத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்குகிறார்.

ரெயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு தெற்கு ரெயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post துபாயில் மேம்பாலம் இடிந்ததால் பலியான உடல்கள் சென்னை வந்தன
Next post நவாசுடன் பேசத் தயார்: புட்டோ