By 14 October 2015 0 Comments

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்..!!

timthumbநாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16.10) வவுனியா நகரசபை மைதானத்தில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிவித்துள்ளது.

காலை 7.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை நடத்தப்படவுள்ள குறித்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பில் பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் தேசிய குடியினங்களாகிய தமிழ் – முஸ்லிம் இன மக்களைத் தண்டிப்பதையும் வஞ்சிப்பதையும் நோக்கமாகக் கொண்டு சிறீலங்கா ஆட்சியாளர்களால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால தடைச்சட்டம் ஆகிய கொடுஞ்சட்டங்கள், எந்த வேளையிலும், எங்கும் எப்போதும், யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் – தடுத்து வைக்கலாம் என்று கொடுக்கும் மலட்டுத் துணிச்சலான அதிகாரங்களை பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பொலிஸாராலும் முப்படைகளாலும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சிறைக்கூடங்களிலும், இரகசிய வதை முகாம்களிலும் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகின்றார்கள். பலர் காணாமலும் போகச் செய்யப்பட்டுள்ளார்கள்.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கும், பிரகடனங்களுக்கும் முரணான இத்தகைய கைது நடவடிக்கைகள் அரசியல் சார்புடைய கைது நடவடிக்கைகளே.

எனவே தான் நாம் காலம் காலமாக ஆட்சிபீடமேறுகின்ற சிறீலங்கா அரசுகளுக்கு திரும்பத் திரும்பவும் கூறுகின்றோம். உங்களதும், உங்கள் அரசாங்கத்தினதும் நலன்கள் சார்ந்த அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் நடத்தப்பட்டுள்ள இத்தகைய கைது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளே.

அவர்கள் குற்றமற்றவர்கள். எத்தகைய வழக்குத் தாக்கல்களும் இன்றி, நீதிக்கான விசாரணைகளுமின்றி, நீதிமன்ற நடவடிக்கைகளுமின்றி நீண்டகாலமாக அரசியல் கைதிகளான எமது பிள்ளைகளை, உறவுகளை தடுத்து வைத்துள்ளீர்கள். இது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சமவாயங்களை அப்பட்டமாக மீறும் அடிப்படை மனித உரிமை மீறல்களாகும்.

இனியும் நீங்கள் அவர்கள் மீது ஏதேனும் ஒரு குற்றத்தை வலிந்து திணித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் கூட, நீங்கள் சுமத்தும் அந்த குற்றத்துக்கு சட்டத்தில் விதிக்கப்படும் தண்டனைக் காலத்துக்கும் அதிகமான தண்டனைக் காலத்தை அவர்கள் சிறைக்கூடங்களில் அனுபவித்து விட்டார்கள். மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அவர்கள் குற்றம் அற்றவர்கள் என்று கண்டறியப்பட்டால், பொய்க்குற்றச்சாட்டுகளால் இத்தனை காலமும் தண்டிக்கப்பட்டுள்ள – சீரழிக்கப்பட்டுள்ள அவர்களின் வாழ்க்கை காலத்துக்கு பொறுப்புக் கூறுவது யார்? அவர்களுக்கு உங்களுடைய பரிகார நீதி தான் என்ன? உங்கள் தீர்வு சீரழிக்கப்பட்ட அவர்களின் கல்வி, தொழில், பொருளாதாரம், குடும்பம், வாழ்க்கைக்கு ஈடாகுமா? அவர்களுக்கு நீங்கள் மிகப்பெரும் துயர் தோய்ந்த வரலாற்று அநீதியை இழைத்துள்ளீர்கள்.

எனவே தான், ‘விசேட நீதிமன்றங்களை அமைக்கப்போகிறோம். சிறப்பு ஆணைக்குழுக்களை அமைக்கப்போகிறோம்’ என்ற இந்த சுத்துமாத்து வீண் பேச்சுகள் இனியும் இங்கு வேண்டாம். எமது உறவுகளான அரசியல் கைதிகளும், சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளும் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துவதும், ‘அரசியல் கைதிகள் என்று இங்கு எவரும் இல்லை’ என்று நீங்கள் மறுப்பறிக்கைகள் வெளியிட்டு விளையாடிக்கொண்டிருப்பதற்கும் அரசியல் கைதிகள் ஒன்றும் ஜடப்பொருட்கள் அல்லர். அவர்களும் மனிதர்களே.

இது ஏனைய மனிதர்களைப் போல இந்த உலகத்தில் வாழவும் நடமாடவும் சீவிக்கவும் அவர்களுக்கு உள்ள மறுக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் சார்ந்த, அத்தியாவசிய வாழ்வுரிமை பிரச்சினையாகும். மனித மாண்பின் உன்னத வெளிப்பாட்டு அடிப்படையில் அனைத்து அரசியல் கைதிகளும் ‘பொதுமன்னிப்பு’ வழங்கி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்று தெரிவிக்கின்றார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் எதிர்வரும் 16.10.2015 வெள்ளிக்கிழமை அன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்துகின்றது. நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக நடத்தப்படும் இந்தப்போராட்டத்தில்,
காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பங்கள், சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் – பிரமுகர்கள், தொழில்சங்கங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரையும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உயரிய பங்களிப்பு வழங்குமாறும் நாடு முழுக்கவும் உள்ள சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளை இன, மத மொழி பேதங்களைக் கடந்து, தொய்வுறாத ஜனநாயகப் போராட்டங்களை நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் ‘பொதுமன்னிப்பு’ எனும் நீதியை அரசியல் கைதிகளுக்கு வழங்குமாறு பிரஜைகள் குழு கேட்டுள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam